காலிமுகத்திடல் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் தொழிற்சங்கங்களின் கரங்கள்
காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுக்கும் தன்னெழுச்சிப் போராட்டத்திற்கு தொழிற்சங்கங்களின் கரங்கள் வலுசேர்த்துள்ளன. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளும் போராட்டக் களத்தில் குதித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், அரசாங்கமும் பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் இளைஞர்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்றைய தினம் (24) 16 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களளுக்கு ஆதரவாக ந பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அத்துடன் நாடளாவிய ரீதியிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வங்கி சேவை சங்கம், இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கம், சுகாதார தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்கம், இலங்கை கணக்காய்வு சேவை சங்கம், தகவல் மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம், ஒன்றிணைந்த ஆசிரியர் சேவை சங்கம் உள்ளிட்ட பெருமளவான தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்துக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளதுடன், காலிமுகத்திடலில் அணிதிரண்டு தங்களது எதிர்ப்பையும் வௌிப்படுத்தியுள்ளன.
இதற்கமைய. கடந்த 20ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினமாக அறிவித்து, தொழில்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஏப்ரல்20, அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு நாளாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளால் கூட்டாக அறிவிக்கப்பட்டது.
அதேநேரம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடி நிலைமை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றி உள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அரசாங்கத்தினால் மக்கள்மீது சுமத்தப்பட்டுள்ள தாங்கிக்கொள்ள முடியாத சுமையினால், உருவாகியுள்ள போராட்டத்தை நசுக்குவதற்கு இடமளிக்காமல் பாதுகாப்போம்.
- பொதுமக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமையுடன், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலையை ஏற்படுத்துவதற்கும், அந்த நிலைமையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் தவறியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தல்.
இதன்படி, 25 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரச நிறுவனங்கள், பகுதி நிலை அரச நிறுவனங்கள் மற்றும் முறைசாரா பிரிவு பிரிவை பிரதிநிதித்துவப்படுத்தும் சேவையாளர்கள் தங்களது மதிய உணவு இடைவேளையின் போது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் இடம்பெற்றது. அரச, பகுதியில் அரச மற்றும் முறைசாரா துறை ஊழியர்கள் பெருமளவானோர் இந்த போராட்டங்களில் பங்கேற்று இருந்தனர். கருப்பு ஆடை அணிந்து இருந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் முதன்மையான கோரிக்கையானது, "மக்கள் கருத்துக்கு தலைவணங்கு - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான வேலை செய்ய முடியாத அரசாங்கம் வீட்டுக்குப் போ" என்ற வாசகம் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களின் சம்பளம் உடனடியாக அதிகரிக்கப்பட வேண்டும், மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தின் இறுதியில் உரையாற்றிய தொழிற்சங்க தலைவர்கள், மக்கள் கருத்துக்கு செவிசாய்த்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றும், புதிய அமைச்சரவையை நியமித்து மக்களின் போராட்டத்தை ஏமாற்ற முடியாது என்றும், ராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் துப்பாக்கி மூலம் பொது மக்களின் போராட்டத்தை முடக்க நடவடிக்கை எடுக்கின்றது என்றும், அடக்குமுறை மூலம் இந்தப் போராட்டத்தை முடக்க முடியாது என்றும் தெரிவித்தனர்.
அதேநேரம் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பெருமளவான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்.
அதேநேரத்தில், காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இளைஞர்கள் போராட்டத்தினை தடுக்க அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளையும் வன்மையாக கண்டிப்பதாக சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியது.
கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தின் அருகில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையானது கடந்த 7 நாட்களும் இளைஞர்கள் அமைதியாக முன்னெடுத்த போராட்டத்தை சீர்குழைக்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயலாகும் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
அதேநேரம், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைமையில் அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாடசாலைக்கு வருவதில் உள்ள சிக்கல்களை எடுத்துக்காட்டும் வகையில் நாளை 25ம் திகதி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அதிபர் ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் தற்போதைய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டதாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என அழுத்தம் கொடுக்கும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்தப் போராட்டத்திற்கு அதிபர் ஆசிரியர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு முழுமையான ஆதரவினை வழங்கிவருகின்றது என்றும் அந்த சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.