நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலையில் தொழிற்சங்கங்களின் பங்களிப்பு!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் தொழிற்சங்கங்களிதன் பங்களிப்பு குறித்து தொழிற்சங்கங்கள் இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
அனைத்து தொழிற்சங்கங்கள், தொழிற்சங்க கூட்டமைப்புகள், தொழில் வல்லுநர்கள், தொழில்முறை அமைப்புகள், சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளின் சகோதர சகோதரிகள்,
ஒட்டுமொத்த தேசமும் எதிர்கொள்ளும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடியிலிருந்து இந்த நாட்டை மீட்பதற்காக இந்தத் தருணத்தில் ஆற்ற வேண்டிய பங்கு.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில், இரண்டு பெரிய அரசியல் கட்சிகள், பல்வேறு கூட்டணிகளை உருவாக்கி, மாறி மாறி நாட்டை ஆட்சி செய்தன. இவர்களது ஆட்சியின்போது நாடு தொடர்ச்சியாக அதல பாதாளத்தில் தள்ளப்பட்டு விட்டதுடன், இன்று நாடு எதிர்நோக்கும் பொருளாதார, சமூக, அரசியல் நெருக்கடிகளுக்கு இவர்கள் அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
முன்னைய ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளினால் இன்று நாடு பாரிய கடனில் மூழ்கியுள்ளது. இதனால் உலகில் மிகவும் வங்குரோத்து நிலையில் உள்ள நாடுகளில் ஒன்றாக எமது நாடு மாறி வருகின்றதுடன், மேலும் பணவீக்கம் தீவிரமாக அதிகரிக்கும் நாடுகளுக்கு மத்தியில், பணவீக்க வீதத்தை 55 வீதத்தில் வைத்து, இலங்கையை உலகில் ஆறாவது இடத்தில் வைப்பதற்கு இந்த ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
2021 நவம்பர் 30ஆம் திகதிய நிலவரப்படி, நாட்டின் மொத்தக் கடன் 17,414 பில்லியன் ரூபாவாகும். இதில் ரூ.6,499 பில்லியன் வெளிநாட்டுக் கடன்களாகவும், மீதமுள்ள ரூ.10,915 பில்லியன் உள்ளூர் மூலங்களிலிருந்து பெறப்பட்டவையாகும். 2021 ஆம் ஆண்டில் இந்த கடனினால் பெறப்பட்ட கடன்களின் தொகை 2,297 பில்லியன் ரூபாவாகும், மேலும் இந்த கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வருடத்திற்கு சுமார் 2,000 பில்லியன் ரூபா செலவாகும். இதில் 980 பில்லியன் ரூபா வட்டிச் செலவாகும். இவ்வாறு கடன் பெற்றிருந்தாலும், அதனைப் பயன்படுத்தி, நாட்டுக்கு பிரயோசனமாக எதுவும் இடம்பெற்றதைக் காணக்கூடியதாக இல்லை. இந்த ஆண்டு பெற்றுக்கொண்ட கடனில், நுகர்வுப் பொருட்களை மாத்திரமே கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1,373 பில்லியன் ரூபாவாகும், மேலும் அந்த ஆண்டில் செலுத்தப்பட்ட கடன் தவணை மற்றும் வட்டித்தொகை 1,942 பில்லியன் ரூபாவாகும். அதன்படி அந்த வருடம் மாத்திரம் அதிகமாக செலுத்தப்பட்டுள்ள கடன் தொகை 569 பில்லியன் ரூபாவாகும். நாட்டின் மொத்தக் கடனை சராசரி ஆண்டு மக்கள்தொகையால் வகுக்கும்போது, புதிதாகப் பிறந்தவர் முதல் முதியவர்கள் வரை நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் 794,434 ரூபா கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளார்கள். கடனை செலுத்துவதற்காக, நாட்டின் கையிருப்பை பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் தங்க கையிருப்பு என்பன வீழ்ச்சியடைந்துள்ளதுடன், இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களுக்காக, டொலர் தட்டுப்பாட்டுடன், எரிபொருள், கேஸ், பால்மா உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இன்று அரிசி, பால் பால்மா சீனி, உப்பு என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் 100 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், எரிபொருள், எரிவாயு, பஸ் கட்டணம், ரயில் கட்டணம், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் 55 சதவீதத்தில் இருந்து 100 சதவீதத்திற்கு உயர்ந்துள்ளன. இந்தச் சூழ்நிலையில், தொழிலாளர் வர்க்கம் உட்பட நாட்டின் அனைத்துத் தரப்பினரும் கடுமையான பொருளாதார அழுத்தத்தில் உள்ளாகியுள்ளனர். மேலும் தற்போதைய அரசினால் பின்பற்றப்படும் முட்டாள்தனமான பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டு மக்கள் பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் உளவியல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். பாடசாலை மாணவர்களின் கல்வி வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பல்கலைக்கழகங்கள் முற்றாக மூடப்பட்டு, நாட்டின் எதிர்கால வாழ்வுக்குத் தேவையான அறிவுசார் சக்தியை உருவாக்கும் வழிகள் முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளன. அறிவார்ந்த மனித வளம் உருவாவதைத் தடுப்பது, எதிர்காலத்தில் நாட்டிற்குத் தேவையான மனித வளத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தடுக்கிறது.
நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியினால் குறிப்பாக சமயலறையில் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ள தாய், தந்தையர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆரோக்கியம் ரீதியான பிரச்சினைகளுக்கும் ஆளாகியுள்ளனர். வாழ்க்கைச் சுமையிலும், எப்படியாவது பசியைத் தணித்துக் கொள்ள உண்ணும் ஊட்டச் சத்து குறைபாட்டிலும் ஒருவேளை, இருவேளை சாப்பிடாமல் இருப்பதன் காரணமாக நாட்டின் இன்றைய தலைமுறையும், வருங்கால சந்ததியும் ஊட்டச்சத்து குறைந்தவர்களாக மாறுவது தவிர்க்க முடியாதது. அதேசமயம், பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் இந்த வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ளும் மன அழுத்தத்தால், சமூகத்தின் தூண்டுதலால் அவர்களிடமிருந்து வெளிப்படும் வலிகள் ஒருவரையொருவர் கொலை செய்வதாக மாறும் அபாயத்தை அடைந்துள்ளதுடன், இது நாட்டை மிக மோசமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது.
இன்று நாட்டின் சட்ட ஆட்சி முற்றிலுமாக சிதைந்து போயுள்ளதுடன், அரசியல்வாதிகள், கணக்கியல் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள், தங்களின் பொறுப்புக்களை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில், சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான வலுவான சட்ட அமைப்புகளோ பொறிமுறைகளோ இல்லை என்பதுடன், தாங்கள் நினைத்தவாறு நாட்டின் கொள்கையை முன்னெடுத்து, பொதுமக்களின் பணத்தை மோசடியான முறையில் பயன்படுத்தி மற்றும் கொள்ளையடித்து, அவர்கள் மற்றும் நன்றாக வாழ்கின்றனர். இந்த அரசியல்வாதிகளையோ அல்லது தனிநபர்களையோ பொறுப்புக்கு உள்ளாக்கக்கூடிய நாட்டின் சட்ட முறைமை பலமாக இல்லாதமையால், ஆட்சியாளர்கள் தங்கள் பொறுப்புகளில் இருந்து விடுபடுவதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், இந்த நெருக்கடியை சரியாக புரிந்துகொண்டு அதை முகாமைத்துவம் செய்யும் ஒரே அணியும் சக்தியும் தொழிற்சங்க இயக்கம் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இன்று தொழிற்சங்க இயக்கமும் தங்களின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் பிளவுபட்டு அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாக மாறியிருப்பது வேதனைக்குரியதாகும். எனவே தனிமனித இலக்குகளையும் தனிப்பட்ட தொழில் முழக்கங்களையும் ஒருகணம் ஒதுக்கிவிட்டு நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கும் மாபெரும் பணியில் கட்சி பேதமின்றி ஈடுபட வேண்டிய தருணம் வந்துவிட்டது. எனவே இத்தருணத்தில் தொழிற்சங்க இயக்கம் பின்வரும் பாத்திரத்தை ஆற்ற வேண்டும் என்பது எமது எண்ணமாகும்.
• தற்போதைய நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை ஏமாற்றி, மாறி மாறி நாட்டை ஆட்சிசெய்த அரசியல் இயக்கங்களுக்கு சவால் ஏற்படும் வகையில், நாட்டு மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்குத் தீர்வாக, குறகிய கால, மத்திய கால மற்றும் நீண்டகால நாட்டினதும், மக்களினதும் சமூக பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வுக்காக, செயன்முறை மற்றும் விஞ்ஞான ரீதியான வேலைத்திட்டத்தை தயாரித்து உடனடியாக மக்கள் மயமாக்கல்.
• இதற்காக, நாட்டிலுள்ள அனைத்து புத்திஜீவிகள், தொழில் வல்லுநர்கள் மற்றும் சிவில் மற்றும் வெகுஜன அமைப்புகளை அணிதிரட்டி, அவர்களுடன் கலந்துரையாடி, மேற்கூறிய வேலைத்திட்டத்தை ஒரு வளர்ச்சி நிலைக்கு கொண்டு வந்து, அதை நடைமுறைப்படுத்த ஒரு பரந்த பொது இயக்கத்தை கட்டியெழுப்பல்.
• நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் மக்களின் பக்கம் நின்று குறுகிய காலத் தீர்வுகளுக்கு ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது.
• சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக பலமிக்கவர்களால், நாட்டை பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மூழ்கடிக்க தயார்ப்படுத்தப்படும் மூலோபாய பனிப்போருக்கு எதிராக எழுந்து நிற்றல்.
• நாட்டின் வளங்களையும், நிலங்களையும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி, அரசியல்வாதிகளாலும், பன்னாட்டு நிறுவனங்களாலும் சீரழிந்துள்ள சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல்.
• நாட்டு மக்களின் வளங்களை கொள்ளையடிப்பவர்களிடமிருந்து, அஅனை மீட்டெடுக்கக்கூடிய வகையில், சட்டத்தின் ஆதிக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற வகையில், பொருளாதார, மீன்பிடி மற்றும் விவசாயம் முதலானவற்றின் கொள்கைகள் சட்டமயமாகும் வகையில், தங்களின் தனிப்பட்ட தேவைகளுக்காகவும் மற்றும் தங்களின் அரசியல் ஒழுங்குப்பத்திரங்களுக்கு அமைய நாட்டின் சட்டத்தை மாற்ற முடியாதவாறு, அந்த அனைத்து விடயங்களையும் அரசியலமைப்பு மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளும் மக்கள்சார்பு, அரசியலமைப்பை உருவாக்குதல்.
• நாட்டில் திருட்டு, மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பதில் பங்களிக்கும் நிறுவனங்கள் பலப்படுத்துதல் மற்றும் கணக்காய்வை வலுப்படுத்துதல்.
இந்த விடயங்களை யதார்த்தமாக்குவதற்கு தமது தொழில்சார் பிரச்சினைகளையும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களையும் ஒரு கணம் ஒதுக்கிவிட்டு, நாட்டையும், நாட்டு மக்களையும் இந்தப் பேரழிவிலிருந்து மீட்பதற்காக, கட்சி பேதமின்றி அனைத்து தொழிற்சங்கங்களுக்கும், தொழிற்சங்கங்கள், தொழிற்சங்கங்க சம்மேளனங்களுக்கும் தொழில் வல்லுநர்களுக்கும், அனைத்து சிவில் மற்றும் வெகுஜன அமைப்புக்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
இலங்கை ஆசிரியர் சங்கம்
இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை பொது தொழிலாளர்கள் சங்கம்
இலங்கை வங்கி ஊழியர் சங்கம்
தொழிலாளர் போராட்ட மையம்
இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம்
இலங்கை கணக்காய்வு பகுப்பாய்வு சேவைகள் சங்கம்
சுதந்திர தொழிற்சங்க மையம்
ப்ரொடெக்ட் சங்கம்
தகவல் மற்றும் தொலைத்தொடர்பு அனைத்து ஊழியர் சங்கம்
மொன்லர் அமைப்பு
வணிக மற்றும் தொழில்துறை ஊழியர்கள் சங்கம்
புரட்சிகர சோசலிச மையம்
ஐக்கிய பொது ஊழியர் சங்கம்
தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம்
அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம்
இளம் ஊடகவியலாளர் சங்கம்
ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு
இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
தேசிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம்
ஐக்கிய தேசிய தபால் ஊழியர் சங்கம்
தொலைத்தொடர்பு பொறியியல் டிப்ளோமாதாரிகள் சங்கம்
ஐக்கிய பொது ஊழியர் சங்கம்
தொழில்நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம்
இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம்
ஊடகவியலாளர்களின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு
ரயில்வே தர தொழிற்சங்க கூட்டமைப்பு
இலங்கை மின்சார சபை பொது ஊழியர் சங்கம்
இலங்கை புதிய ஊழியர் சங்கம்
ஓன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையம்