இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிலிருந்து வௌியேறியது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசிலிருந்து வௌியேறியது

அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) அறிவித்துள்ளது.

அதன் தலைவர் செந்தில் தொண்டமான் பேஸ்புக் பதிவில் இதனை அறிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பதவி விலக தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கோரிக்கைக்கு அமைவாக மலையகப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு திட்டமிடுதல், தோட்டத் தொழிலாளி ஒருவரின் நாளாந்த சம்பளம் ஆயிரம் ரூபா மற்றும் ஆசிரியர் உதவியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ள.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம். இராமேஷ்வரன் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று காலை அறிவித்துள்ளது.

இது குறித்து இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தமது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது>

அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுகிறது இ.தொ.கா
 
கட்சியின் ஏகமனதான தீர்மானத்துக்கிணங்க, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்தது.
 
நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்தது.
 
இதேவேளை, தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இராஜினாமா செய்வதோடு, அவரும் இ.தொ.காவின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரனும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படுவதற்கும் தீர்மானித்தனர்.
 
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமை மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென்று தெரிவித்த அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், தொடர்ந்தும் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் தீர்மானங்களை எடுக்கவும் மக்களுக்காக முன்னிற்கவும் இ.தொ.கா தயாராக இருக்கின்றதென்றும் குறிப்பிட்டார்.

 

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image