அரச பல்கலைக்கழகங்களில் அதிகரிக்கும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள்!
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் 16.6 வீத மாணவர்கள் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்குள்ளாகின்றனர் என்று புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
இலங்கை அரச பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் பரவுவது குறித்த புதிய ஆய்வில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) பாலின சமத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான மத்திய நிலையமானது யுனிசெஃப் உடன் இணைந்து, இந்த ஆய்வினை மேற்கொண்டுள்ளது. பல்கலைக்கழக பிரிவுகள், புதிய மற்றும் பழைய பல்கலைக்கழகங்கள் மற்றும் போராட்டங்கள் நிலவிய பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் என்பவற்றில் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது.
அண்மைக்காலமாக இலங்கையில் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள் மற்றும் பாலியல், பாலின அடிப்படையிலான வன்முறைகள் அதிகரித்து வருகின்றமையானது கவலையளிக்கிறது என்று என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
குறித்த ஆய்வுக்கமைய, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 51 வீதமானவர்கள் வாய்மொழித் துன்புறுத்தல்களுக்கும், 34.3% உளவியல்சார் வன்முறைகளுக்கும், 23.8% பேர் உடல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கும், 16.6% பேர் பாலியல் துன்புறுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது. கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் இருவரும் பாலியல் மற்றும் பாலியன அடிப்படையிலான வன்முறைகள் இடம்பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளனர் இருப்பதைக் குறிப்பிட்டனர். எனினும் கிட்டத்தட்ட அனைத்து சம்பவங்களும் ஒரு பல்கலைக்கழகத்தில் மட்டுமே பதிவாகியுள்ளன.
பல்கலைக்கழக ஊழியர்களில் 44% பேர் வாய்மொழி மூல பாலியல் வன்முறைகளுக்குள்ளானதாகவும் 22.3% பேர் பாலியல் லஞ்சம் தம்மிடம் கேட்கப்பட்டதாகவும், 19.9% பேர் உடல்ரீதியான பாலியல் வன்முறையை அனுபவித்ததாகவும் தெரிவித்துள்ளனர். அரச பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களில், 21% பேர் வாய்மொழி பாலியல் வன்முறைகளுக்குள்ளாகியிருப்பதுடன், 1.5% பேர் பலவந்தமாக பாலியல் உறவுக்குட்படுத்தப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.
பல்கலைகழகத்தின் முதல் வருடத்தில் மாத்திரமே பகிடிவதை இடம்பெறும் என்று பொதுவாக கருதப்பட்டாலும் முதலாம் ஆண்டு நிறைவடையும் போதும் பகிடிவதை துன்புறுத்தல்கள் நிறைவடையாது என்று இவ்வாய்வு சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் மேற்பார்வையிடும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மாணவர்கள் சிரேஷ்ட மாணவர்களினால் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையிலான புதிய இருக்கமான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.
புதிய விதிமுறைகளுக்கமைய பல்கலைக்கழக அதிகாரிகள் துன்புறுத்தல் சம்பவங்கள் இடம்பெறுமாயின் பொலிஸில் முறைப்பாடு செய்யவேண்டும். அத்துடன் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறைத்தண்டனை, உயர்கல்வி நிறுவனத்திலிருந்து வெளியேற்றுதல் மற்றும் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்ட நஷ்ட ஈட்டுத்தொகை செலுத்துதல் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன. அனைத்து மாணவர்களும் புதிய மாணவர்களை துன்புறுத்தல்களுக்குள்ளாக்க மாட்டோம் என்பதை எழுத்து மூலமாக உறுதிப்படுத்துவதும் கட்டாயமாகும்.