பாடசாலை மூடப்பட்ட காலத்திற்கான வசதி, சேவைக்கட்டணங்கள் அறவிடவேண்டாம்!
கொரோனா தொற்று காரணமாக சுமார் இரண்டு வருடங்களாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன, ஆனால் அந்த காலப்பகுதியில் வசதிகள் மற்றும் சேவைகளுக்காக ஆயிரக்கணக்கான பெற்றோரிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் இவ்வாறான நெருக்கடியான சூழலுக்கு இடமளிப்பதற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் தெரிவித்துள்ளது.
இக்காலப்பகுதியில் சம்பளத்தை மாத்திரமே அரசாங்கம் வழங்கியது. ஏனைய அனைத்து செலவுகளுக்கான நிதியும் மிஞ்சியிருந்தபோதிலும் பாடசாலை மூடப்பட்டமையினால் வீழ்ச்சியடைந்த கல்வியை மீள கட்டியெழுப்ப அரசாங்கம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய அழுத்தங்கள் தொடர்பில் எவ்விதத்திலும் கவனத்திற்கொள்ளாமல் இவ்வாறு மேலும் மேலும் நிதி சேகரிப்பில் ஈடுபடுவது நியாயமான செயற்பாடல்ல. என்பதை நாம் சுட்டிக்காட்டுகிறோம்.
அத்துடன் தற்போதைய சூழலில் நாட்டில் நிலவும் பாரிய பொருளாதார பிரச்சினைகளுக்கிடையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது. இந்நேரத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டிய அரசாங்கம் நிதி சேகரிக்க வாய்ப்பை ஏற்படுத்துவதானது கவலைக்குரியது. எனவே பாடசாலைகளை கொண்டு நடத்துவதற்கான நிதியை விரைவில் வழங்கவேண்டும் என்று பொறுப்புடன் எமது சங்கம் கோருவதாகவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.