அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள உயர்வு ஜனவரியில் - கல்வியமைச்சு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சம்பள உயர்வுக்கான நடவடிக்கைகள் சம்பளம் மற்றும் ஊதிய ஆணைக்குழு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளரான பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
எனினும், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான சுற்றறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான சுற்றறிக்கையை வெளியிட வேண்டும். அத்தகைய சுற்றறிக்கையின் வெளியீடுகளுடன், சம்பளக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தொழிற்சங்க பொதுச் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.