தொழில் இழந்த ப்ரட்மொர் தோட்டத் தொழிலாளர்கள் தற்கொலை மன நிலையில்
மஸ்கெலியா ப்ரட்மொர் தோட்ட தொழிலாளர்கள் நேற்று (05) காலை தோட்டத்தின் மத்தியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
தாம் கடந்த 40 நாட்களுக்கு மேலாக தொழில் இல்லாத நிலையில் தமக்கான வருமானம் இன்றி தமது வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளதாக தெரிவித்தே இவர்கள் இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ப்ரட்மோர் தோட்டம் மஸ்கெலியா நகரத்தில் இருந்து சுமார் 15 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள மிக கஸ்டப்பிரதேசமாகும். இங்கு 46 குடும்பங்களை சேர்ந்த 160 பேர் வாழ்ந்து வருவதுடன் 45 பேர் இந்த தோட்டத்தின் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர்.
இந்த தோட்டம் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையிடம் இருந்து தனி நபர் ஒருவரினால் குத்தகைக்கு பெறப்பட்டு கடந்த காலங்களில் மிக சிறப்பாக செயற்பட்டு வந்தாகவும் தமக்கான சம்பளங்கள் முறைப்படி கிடைக்கப்பெற்றதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குத்தகைக்கு பெற்று தோட்டத்தை நடாத்தி வந்தவர் இயற்கை எய்திய நிலையில் அவருடைய மகன் தோட்டத்தை முகாமை செய்ததாகவும் எனினும் கடந்த 40 நாட்களுக்கு முன்னர் அவர் தோட்ட தொழிலாளர்களை சந்தித்து தாம் தோட்டத்தை 'மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு' கையளித்து விட்டதாகவும் எனவே நீங்கள் இதன் பிறகு சபையின் கீழ் தொழில் புரிய வேண்டும் என்றும் கூறி சென்றுள்ளார்.
இந்த நிகழ்வின் பின்னர் தமக்கான முகாமை கட்டமைப்பு இல்லாமல் தாம் தொழிலுக்கு செல்லாது இருப்பதாகவும் இவ்விடயம் தொடர்பாக 'மக்கள் தோட்ட அபிவிருத்தி சபையிடம்' வினவியபோது உங்கள் தோட்டம் (ப்ரட்மோர்) இதுவரை தம்மிடம் கையளிக்கப்படவில்லை எனவே தம்மால் எதுவும் செய்ய முடியாது என்று அவர்கள் தெரிவித்ததாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த 40 நாட்களாக தாம் தொழில் இழந்துள்ளதால் தமக்கான சம்பளமும் இழக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு வேலை உணவுக்காக தாமும் தமது குடும்பமும் பெரும் இன்னல்களுக்கு உட்பட்டுள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர். தமது சேமிப்புகள் எல்லாம் கரைந்து விட்ட நிலையில் சிறுக சிறுக சேமித்த நகைகளை ஈடுவைத்து இதுவரை உணவு தேவைகளை பூர்த்தி செய்த கொண்டதாகவும் தற்போ நண்பர்கள் உறவினர்களின் உதவியுடனே ஒரு வேலை உணவேயேனும் பூரத்தி செய்து கொள்வதாகவும் இவர்கள் தெரிவித்தனர்.
மேலும் தமது குழந்தைகளுகான அடுத்தவேலை உணவு, பால்மா, கல்வி, மருத்துவம் என்பவற்றை பூர்த்தி செய்யத முடியாது தாம் பெரும் மன உலைச்சலுக்கு உள்ளாகியுள்ளதாகவம் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளும் மன நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
மருத்துவ தேவைக்காக மஸ்கெலியா பொது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ள நிலையில் அதற்கு பஸ்சிற்கு கொடுப்பதற்கு ஏனும் காசு இல்லாது பிச்சை எடுக்காத குறையாக பஸ் உரிமையாளர்களிடம் கெஞ்சி தாம் பயணம் செய்து தமது மருத்து தேவையை தற்போது பூர்த்தி செய்து கொள்வதாகவும் அவர்களும் எத்தனை நாட்களுக்குதான் தம்மை இலவசமாக அழைத்து செல்ல முடியும் என்றும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே தமது தொழிற்சங்கங்களும் தம்மிடம் வாக்குகளை பெற்றக் கொண்ட அரசியல்வாதிகளிடமும் தமது வாழ்க்கைகான தொழிலை பெற்று தந்து தம்மை வாழ் வாழ் வழி செய்து தரும்படி கெஞ்சி கேட்பதாக தெரிவித்தனர்.