பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் நடவடிக்கை பிரச்சினையானது: ஜோசப் ஸ்டாலின்

பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் நடவடிக்கை பிரச்சினையானது: ஜோசப் ஸ்டாலின்
பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டம் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
கொழும்பில் நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவிக்கையில்,
 
பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டு கடந்த 16 ஆம் திகதி, அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.  மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டிய பாடநெறி அடங்கிய பாடத்திட்டம் ஒன்றை, திருத்தப்பட்ட பாடத்திட்டமொன்று கல்வி அமைச்சின்  செயலாளரின் கையொப்பத்துடன் 11 மாதம் 9ஆம் திகதி  அனைத்து பாடசாலைகளுக்கும் அனுப்பப்பட்டன.
 
கல்வியமைச்சின் செயலாளர் தேசிய கல்வியல் நிறுவகத்தின் மூலமாக பாடசாலைகளில் கற்பித்தலுக்கான பாடத்திட்டத்தை மறுசீரமைத்து,  அந்தப் பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தெளிவான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
 
இரண்டு ஆண்டுகளாக பாடசாலை கற்றல் நடவடிக்கை இடம்பெறாத சூழ்நிலையில்தான்,  இவ்வாறாக இந்த இரண்டு ஆண்டுகளுக்குமான பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு போதுமான காலம் இல்லாதமை காரணமாக இப்படியான தீர்மானத்தை மேற்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.
 
ஆனால், பிரச்சினை அதுவல்ல.  11 மாதம் 26ஆம் திகதி கல்வியமைச்சின் செயலாளர் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுகின்றார். அதில்தான் பிரச்சினை இருக்கின்றது.
 
அந்த சுற்றறிக்கையில் கூறப்படுவதாவது,  இந்தப் பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக அனைத்து பாடத்திட்டங்களையும் முன்னெடுக்க வேண்டும் என  தெளிவாக கூறப்படுகின்றது. 
 
தம்மால் வெளியிடப்பட்ட வழிகாட்டல் கோவை அடங்கிய  கடிதத்தை இரத்துச் செய்து பாடசாலைகளின் பரீட்சைகள் நடைபெறுவதற்கான காலம் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பாடத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு போதியளவு காலம் இருப்பதன் காரணமாக இந்த பாடத்திட்டங்களை முழுமைப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.
 
வர்த்தமானியை மீளப்பெறுவதுபோன்ற வேலை தானே இது. அரசாங்கம் வர்த்தமானி ஒன்றை வெளியிடுகின்றது, பின்னர் அதை விலக்கிக் கொள்கின்றது. அவை பொருட்களின் விலை, அரிச விலை, ஏனைய பொருட்களின் விலை தொடர்பிலானவை.
 
ஆனால் இது மாணவர்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய  பிரச்சினையாகும். இரண்டு ஆண்டுக்கு முன்னர் மாணவர்கள் கல்வியின்றி வீட்டிலிருந்த நிலையில், 11 மாதம் 9 ஆம் திகதி மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டு,   பின்னர் 26 திகதி மற்றும் ஒரு கடிதத்தை வெளியிட்டு அதனை செய்ய வேண்டாம் இதனை செய்யுமாறு கூறுகின்றனர். இது என்ன வேடிக்கை?
 
இந்த நாட்டு மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதுதான் கல்வி அமைச்சின் செயலா என்று நாங்கள் கேட்கின்றோம்.  இரண்டு ஆண்டுகள் இருந்தது.  மாணவர்களின் பாடத்திட்டத்தை மறுசீரமைத்து கிரமமான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தினோம்.  ஆனால் அரசாங்கம் அதனைக் கருத்திற்கொள்ளவில்லை.
 
இறுதியில் மாணவர்களின் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டு,  தேசிய கல்வி நிறுவகம் ஆலோசனை வழங்கிய பின்னர், மீண்டும் அனைத்தையும் செய்யுமாறு தீர்மானம் எடுப்பது என்பது என்ன இது?  இதுபோன்று செயல்படுவதற்கு இப்படியான அதிகாரிகள் அவசியம்தானா மாணவர்களின் வாழ்க்கை உடன் விளையாடும் அதிகாரிகள் அவசியம்தானா என்று நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றோம். 
 
இரண்டு ஆண்டுகளாக திட்டமிட்ட அடிப்படையில் இந்த பாடத்திட்டத்தை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டம் இருந்தது.   குறிப்பாக சுமார் ஆறு மாத காலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. அந்த காலப்பகுதியில் இது தெரியவில்லையா?  பாடத்திட்டத்தை மறுசீரமைத்து சுற்றறிக்கை வெளியிட்டபோது இந்த விடயங்கள் தெரியவில்லையா? இது பாடசாலை கட்டமைப்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிபர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தி இருக்கின்றது.  
 
ஏனெனில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆசிரியர்கள் தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியிடப்பட்ட மறுசீரமைக்கப்படட பாடத்திற்கு தயாராகினர்.  அதற்கு தேவையான வேலைத்திட்டங்களை அமைத்து செயல்படுத்தி வந்தனர்.  அதனை செய்து 10 நாட்கள் முடியும் முன்னர்,  தற்போது அதை மாற்றியமைக்கின்றனர். ஒட்டுமொத்த பாடத்திட்டத்தையும் முன்னெடுக்குமாறு கூறுகின்றனர். இது எந்த அடிப்படையிலானது? இதனை எப்படி செய்வது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image