இம்முறை வரவுசெலவில் அரச அதிகாரிகள் கவனத்திற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 29ம் திகதி நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை அரச அதிகாரிகள் தொழிற்சங்க சம்மேளனம் அறிவித்துள்ளது.
தமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருமாறு கடந்த 13ம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்தபோதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பிரதீப் பஸ்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே எதிர்வரும் 28ம் திகதிக்கு முன்னர் குறித்த விடயத்திற்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக கடிதம் மூலம் அச்சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கிராமசேவகர், அபிவிருத்தி அதிகாரிகள், முகாமைத்துவ சேவை அதிகாரிகள், விவசாய ஆராய்ச்சி உதவி அதிகாரிகள், அலுவலக கள அதிகாரிகள், கனிஷ்ட ஊழியர்கள் ஆகியோர் இப்பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் பங்குபற்றுவர் என்றும் பிரதீப் பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.