ஓய்வூதியக்காரர்களுக்கான காப்புறுத்திட்டம் தற்காலிக இடைநிறுத்தம்!
ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு முன்மொழியப்பட்டிருந்த 'அக்ரஹார காப்புறுதித் திட்டத்தை' தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
சில ஓய்வூதியர்கள் சங்கங்கள் இக்காப்புறுதித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்தே தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, குறித்த காப்புறுதித் திட்டம் தொடர்பில் ஓய்வூதியர்கள் சங்கங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உரிய தீர்மானம் எட்டப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு முன்னர் ஓய்வு பெற்ற அனைத்து அரச அதிகாரிகளுக்கும் நன்மைப்பயக்கும் வகையில் அக்ரஹர காப்புறுதித் திட்டத்தின் கீழ் நன்மைகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் அரச சேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சு கடந்த 29ம் திகதி சுற்றுநிரூபம் ஒன்றை வௌியிட்டிருந்தது.
அதற்கமைய, 70 வயதுக்கு குறைந்த ஓய்வூதியம் பெற்றவர்களிடமிருந்து மாதாந்தம் 400 ரூபாவும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களிடமிருந்து 600 ரூபாவும் அறிவிட தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.