ஆயுள் காப்புறுதி முகவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்து, இலங்கையில் ஆயுள் காப்புறுதி முகவர்களாக செயற்படும் காப்புறுதி முகவர்களுக்கு எதிராக காப்புறுதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் தொழிற்சங்க உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காப்புறுதி நிறுவனங்கள் தமது உரிமைகளை மீறுவதாகக் கூறி 45,000 அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த சங்கத்தினர், முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி பிரபாத் சந்திரகீர்த்திக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
குறிப்பாக, பல நிறுவனங்கள் ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கான EPF / ETF நிதிக்கு பங்களிப்பு செய்கின்றன. எனினும் சில காப்பீட்டு நிறுவனங்கள் பல்வேறு காரணங்களை முன்வைத்து ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கு EPF / ETF செலுத்தாமல் தவிர்து வருகின்றன. இது தமக்கு இடம்பெறும் பாரிய உரிமை மீறல் என்றும் அச்சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில் காப்பீட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஆயுள் காப்பீட்டு முகவர்களுக்கான EPF / ETF இற்கான கட்டாயம் பங்களிப்பு செய்வதற்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்றும் தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.
காப்புறுதி விற்பனை முகவர்களின் சமர்ப்பிப்புகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட சகல தரப்பினருடனும் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவையில் இணக்கம் காணப்பட்ட சட்டத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய சட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் அமைச்சர் தெரிவித்தள்ளார்.
இந்நிகழ்வில் தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பத்திரன, தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி, ஆயுள் காப்புறுதி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் டபிள்யூ. சி. பண்டார, செயலாளர் இசிர சதுரங்க, சிரேஷ்ட ஆலோசகர் திரு.சந்தன பலன்சூரிய மற்றும் பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.