அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்குமாறு கோரித்து ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டத்திற்கு பொலிஸார் தடையேற்படுத்தியமைக்கு ஆசிரியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடுங் கண்டத்தை வௌியிட்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கம், இலங்கை தேசிய அதிபர் சங்கம், அதிபர் சேவை சங்கம் மற்றும் அதிபர் தர சங்கங்களின் ஒன்றியம் ஆகியவற்றின் கையெழுத்துடன் இக்கண்டன அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அழுத்தம் செலுத்தும் வகையில் நேற்றுமுன்தினம் (26) காலி முகத்திடலில் போராட்டங்களுக்காக ஒதுக்கப்படட இடத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தை பொலிஸார் தடை செய்தனர்.
சம்பள முரண்பாட்டை தீர்த்தல், கல்விச்சேவையை தனியார்மயப்படுத்தல், இராணுவ மயமாக்கலுக்கான கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டத்தை நிறைவேற்றல், தொழிற்சங்க நடவடிகைகயில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்களை கைது செய்தமை போன்ற பல விடயங்களை முன்வைத்து கடந்த ஜூலை மாதம் 12ம் திகதி ஆசிரியர் அதிபர் சங்கங்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.
இந்நிலையில், சட்டவிரோதமாக அதிபர் ஆசிரியர்களை கைது செய்தல், அதிபர் ஆசிரியர்களை அச்சுறுத்துதல், அதிபர் ஆசிரியர்களை விசாரணைக்காக புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்தல், போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர் ஆசிரியர்களை நீதிமன்றில் நிறுத்தல் போன்ற பல்வேறு அழுத்தங்களையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் நேற்று முன்தினம் அதிபர் ஆசிரியர்கள் அமைதியான முறையில் முன்னெடுத்த சத்தியாக்கிரக போராட்டத்தையும் பொலிஸார் தடுத்தி நிறுத்தியுள்ளனர். இதனூடாக அனைவருக்கும் உள்ள கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை, எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமையை கடுமையாக மீறும் செயலாகும்.
பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு கடுமையான கண்டத்தை தெரிவிப்பதாகவும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு வௌியிட்டுள்ள கண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.