அதிபர், ஆசிரியர், மாணவர்கள் இன்றி வெறிச்சோடிய பாடசாலைகள்-

அதிபர், ஆசிரியர், மாணவர்கள் இன்றி வெறிச்சோடிய பாடசாலைகள்-

இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் போராட்டம் வெற்றியளித்துள்ளது என்று இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுப்பது சாத்தியமில்லை என்று சரத் வீரசேக்கர போன்ற அமைச்சர்கள் தெரிவித்திருந்தபோதிலும் அம்மாகாணங்களில் மிக வெற்றிகரமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதிபர் ஆசிரியர்கள் மாத்திரமல்ல மாணவர்களும் பாடசாலைகளுக்கு வருகைத் தந்திருக்கவில்லை. இன்று ஆசிரியர்கள் வழங்கியுள்ள செய்தியை கருத்திற்கொண்டு உடனடியாக உபகுழுவின் முன்மொழிவுகளை அரசாங்கம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு இல்லையேல் மீண்டும் போராட்டங்களினூடாக அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களில் 98,99 வீத பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன. அதிபர் ஆசிரியர்கள் பணிக்கு சமூகமளிக்கவில்லை. வட மேல் மாகாணத்தில் 600 பாடசாலைகளில் 598 பாடசாலைகள் அதாவது 99 வீத பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. சில பாடசாலைகளில் வந்த மாணவர்கள் பொலிஸாரை கண்டு மீண்டும் வீடு சென்றுள்ளனர். சிறுவர் உளவியல் அறியாது செய்யும் முட்டாள்தனமான முடிவுகளை இந்த அரசாங்கம் எடுத்துள்ளது.

எமது போராட்டத்தை முன்னெடுக்க உதவிய அனைத்து அதிபர் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு நாம் எமது கௌரவத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பின் பிரதிநிதியும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளருமான மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image