நிரந்தர நியமனம் வழங்காமல் மீண்டும் ஏமாற்றப்படும் பயிலுநர் பட்டதாரிகள்!
எவ்விதமான முன்னேற்பாடுகளுமின்றி தமக்கு ஆதரவான ஆசிரியர்கள் மற்றும் அமைச்சர்களை பயன்படுத்தி அதிபர் ஆசிரியர்களை குறைகூறும் அரசாங்கம் பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்காமல் மறுபடியும் பாடசாலைகளில் இணைத்துள்ளது என்று ஒன்றிணைந்த பயிலுநர் பட்டதாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் தமது உரிமைக்காக போராடும் போது அதனை இல்லாதொழிப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளில் ஒன்றே பாடசாலையை ஆரம்பித்துள்ளமை. ஏற்கனவே ஒரு வருடங்களுக்கு மேலாக பாடசாலைகளில் கற்பித்தல் உட்பட பல செயற்பாடுகளை முன்னெடுத்த பயிலுநர் பட்டதாரிகள் நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் கடந்த சில மாதங்களாக வேறு சேவைக்குள் உள்வாங்கப்பட்டனர். இதற்கு நாம் கடுமையான எதிர்ப்பை வௌியிட்டிருந்தோம். இன்று திடீரென அவர்களுடைய நினைவு வந்துள்ளது. பல அறிக்கைகளை வௌியிட்டு, அச்சுறுத்தி பாடசாலைகளுக்கு அழைத்துள்ளனர்.
இந்நிலையில் பொதுசேவைகள் அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி 18,000 பேர் கல்வியமைச்சின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார். எங்களுக்குத் தெரிந்தவரை அது தொடர்பில் இன்றும் கலந்துரையாடலே நடந்துள்ளது. இன்னும் இணைக்கப்படவில்லை. அனைத்து பயிலுநர் பட்டதாரிகளும் பிரதேச செயலகங்களின் கீழே இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் 60,000 பயிலுநர் பட்டதாரிகளை பாடசாலைகளுக்கு அழைத்து வருவதாக ரோஹித்த அபேகுணவர்தன அமைச்சர் தெரிவித்துள்ளார். இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் எண்ணிக்கை்கூட அமைச்சருக்கு தெரியவில்லை என்று இதனூடாக தெரிகிறது. இதுவரை 49,000 பயிலுநர் பட்டதாரிகளே இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் உள்வாங்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர்.
ஆசிரியர் பிரச்சினைகளை தீர்த்து பாடசாலையை மீள பழைய நிலைக்கு மீட்டெடுக்குமாறே கல்வியமைச்சிடம் கோரப்படுகிறது. அந்த போராட்டத்தினுள்ளே பயிலுநர் பட்டதாரிகளை சேர்க்க வேண்டாம் என்றே நாம் கோருகிறோம். பாடசாலைகளுக்கு பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான உரிய நடைமுறைகளை முன்னெடுக்குமாறே நாம் கேட்டுக்கொள்கிறோம். ஏற்கனவே உயர்தர தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளில் 5000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. 2016ம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை. பயி
இதேவேளை, இணைக்கப்படும் பாடசாலைகளில் இணைக்கப்படும் பட்டதாரிகளை 1- 11ம் தரம் வரையான வகுப்பு மாணவர்களுக்கு தலைமைத்துவ விடயத்தை கற்பிக்க பயன்படுத்தப்படுவார்கள் என்று கடந்த 2020 பெப்ரவரி 05ம் திகதி ஜனாதிபதி முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றையும் கவனத்திற்கொண்டு செயற்படுமாறு கோருகிறோம்.
சில பிரதேச செயலகங்களில் அரச சுற்றுநிருபத்தை கவனத்திற்கொள்ளாமல் கர்ப்பிணித் தாய்மாரையும் பாலூட்டும் தாய்மாரையும் அழைத்துள்ளனர். அதிபரின் உத்தரவைத் தவிர ஏனையோரின் கூறும் எந்தவொரு பணியையும் செய்வதில்லை என்று ஏற்கனவே பயிலுநர் பட்டதாரிகள் தீர்மானித்துள்ளனர்.
பயிலுநர்களாக இணைக்கப்பட்ட 53,000 பட்டதாரிகளையும் செப்டெம்பர் மாதம் 3ம் திகதி முதல் நிரந்தர நியமனம் வழங்குவததற்கு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு அனைத்து பயிலுநர் பட்டதாரிகளிடமும் கேட்டுக்கொள்வதாகவும் அச்சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.