தொழிற்சங்கங்களின் பலவீனமே கூட்டு ஒப்பந்ததிற்கு செல்ல முடியாமைக்கு காரணம் - தொழில் அமைச்சர்

தொழிற்சங்கங்களின் பலவீனமே கூட்டு ஒப்பந்ததிற்கு செல்ல முடியாமைக்கு காரணம் - தொழில் அமைச்சர்

பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களின் பலவீனம் காரணமாகவே கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்ல முடியாமல் போனதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

 தொழிற்சங்கத்தினர் முரண்பட்டு, பிளவடைந்து இருக்கின்றபோது அதன் இலாபத்தை முதலாளிமார்கள் பெறுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிபோது மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவிக்கையில்,

கூட்டு ஒப்பந்தத்திற்கு செல்லுமாறு அழுத்தம் கொடுக்க அமைச்சருக்கு அதிகாரமில்லை. முதலாளிமார் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே, 12 தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. முதலாளிமார்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றனர். தொழிற்சங்கங்கள் பிளவடைந்துள்ளன.

இன்று தொழிற்சங்கங்களுக்கு தங்களது பலத்தை வெளிப்படுத்தக்கூடிய நிலைமை இல்லை. தொழிலாளர்களின் உரிமைகளை சட்டத்தில் பாதுகாக்கக்கூடிய எல்லை ஒன்றுள்ளது. ஏனையவற்றைப் பெற்றுக்கொள்ள தொழிற்சங்கங்கள் பலமாக இருக்கவேண்டும். தொழிற்சங்கத்தினர் முரண்பட்டு, பிளவடைந்து இருக்கின்றபோது அதன் நன்மையை முதலாளிமார்கள் பெறுகின்றனர்.

கூட்டு ஒப்பந்தம் ஒன்று இருக்குமாயின் அது மிகவும் நல்லதாகும். எனினும், தொழிற்சங்கங்களுக்கு இடையிலான பிளவு காரணமாக அதனை செய்ய முடியாமல் போனது.

இந்த நிலையில், என்னால் செய்யமுடிந்த உச்சப்பட்ச சேவையை செய்து, தற்போது நீதிமன்றில் நான் பிரதிவாதியாக உள்ளேன். எனினும், தடை உத்தரவு ஒன்றை வழங்குவதை, சட்டத்தரணிகள் மூலம் தடுக்க முடிந்தது. அதனால், தற்போது ஆயிரம் ரூபா வேதனம் வழங்கப்படுகின்றது. எனினும், அதனை வழங்கும்போது சில சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.

இதேநேரம், சந்தா பணத்தை அறவிட்டு அதனை தொழிற்சங்கங்களுக்கு வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆராய்ந்தபோது உயர்நீதிமன்றின் வழக்கு தீர்ப்பு ஒன்றுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உயர்நீதிமன்றின் அந்த தீர்ப்புக்கு அமைய, இந்தப் பணம் அறவிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்று தங்களால் அழுத்தம் கொடுக்க முடியாது.

எனவே, இந்த நீதிமன்ற வழக்கு நிறைவடைந்தவுடன், கட்டாயமாக தொழிற்சங்கங்களுக்கு சந்தா பணத்தை அறவிட்டு வழங்குவதற்கு சட்டமொன்றைக் கொண்டுவர உள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த வழக்கில் கிடைக்கும் தீர்ப்புக்கு அமைய, எதிர்காலத்தில் ஆயிரம் ரூபா வேதனத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்கி, அவர்களின் தொழில் நிபந்தனை என்ன என்பது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கான சட்ட கட்டமைப்பு அவசியமாயின், அதனை ஏற்படுத்துவதற்கு தொழில் திணைக்களம் தயாராக உள்ளது என்றும் தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image