பயிலுநர் பட்டதாரிகளை தீர்ப்பதற்கான குழு தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்திக்குமா?
பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள குழு பட்டதாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்வது அவசியம் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் நிலையம் தெரிவித்துள்ளது.
அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜனக்க பண்டார தென்னகோன் மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் அடங்கிய குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
பயிலுநர் பட்டதாரிகளை விரைவில் நிரந்தர நியமனத்தில் இணைத்துக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இவ்வமைச்சர்கள்வாய்ப்பை வழங்குமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் நேற்று (15) தெரிவித்தார்.
ஒரு வருட பயிற்சியின் பின்னர் நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்வதாக உறுதியளித்து கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளின் பயிற்சிகாலம் இம்மாதம் 3ம் திகதியுடன் பூர்த்தியாகியுள்ளது. எனவே இனி அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதே தற்போது தேவை. பிரச்சினையொன்று ஏற்பட்டவுடன் அதற்கு குழுவொன்றை அமைப்பது தற்போது பேஷன் ஆக மாறியுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள குழு விரைவில் தீர்வை வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு இவ்வாறு பயிற்சியை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் பிரச்சினைகளை ஏற்படுத்தி 6 மாதங்களுக்கு பிற்போடப்பட்டது. அவ்வாறான நிலை இம்முறை ஏற்படாமல் விரைவில் தீர்வை பெற்றுத்தருமாறும் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.