நேற்று நள்ளிரவு தொடக்கம் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை இலங்கை ரயில் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர்.
ரயில் திணைக்கள ஊழியர்களுக்கு சுகாதார பாதுகாப்புத் திட்டங்களை செயற்படுத்துமாறு கோரி இவ்வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன நேற்று (12) குருணாகலில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இதுவரை 78 ரயில் நிலைய அதிகாரிகள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மக்களை அதிகம் சந்திக்கும் பணியில் இருக்கும் ரயில் திணைக்கள ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்புத் திட்டங்களை செயற்படுத்துமாறு கோரியே நாம் இவ்வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.
இப்போராட்டத்தினால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாவார்கள். அதற்காக நாம் மன்னிப்பு கோருகிறோம். எனினும் எமது பாதுகாப்புக்காக நாம் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதற்கு ரயில் திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.