அதிபர் ஆசிரியர் சங்கங்களின் ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டம்
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்குமாறு கோரி போராடி வரும் தொழிற்சங்கங்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாற வலியுறுத்தி இன்று (12) ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பு சுதந்திர சதுக்கத்தின் முன்பாக இந்த சத்திய கிரக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதிபர் ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் அரச, அரை அரச, தனியார் துறைசார் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. சுகாதார விதிமுறைகளுக்கமைய, தொழிற்சங்கங்களின் தலைவர்கள் மாத்திரம் இந்த சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளன. அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு விரைவில் தீர்வு வழங்க தவறும் பட்சத்தில் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பின் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை தவிர்த்து குழுக்களை நியமித்து தீர்வு வழங்குவதை தாமதப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளதாகவும் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்க்குமாறு கோரி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு மாதம் பூர்த்தியாகிறது. எனினும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. குழுக்கள் நியமித்து காலதாமதம் செய்தவதில் அரசாங்கம் கவனமாக உள்ளது. அதிபர் ஆசிரியர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து அரசியல்வாதிகளை தௌிவுபடுத்தும் செயற்பாடொன்று இன்று தொடக்கம் ஆரம்பிக்கப்படுகிறது என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரையில் ஒன்லைன் கற்பித்தல், க.பொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் அனுப்பும் செயற்பாடு மற்றும் ஏனைய அனைத்து பரீட்சை செயற்பாடுகளில் இருந்தும் தொடர்ந்தும் விலகியிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.