சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிராக முதலைக்கண்ணீர் வேண்டாம்
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிராக முதலைக்கண்ணீர் வேண்டாம் என்றும் என பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான விசேட வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் சட்டத்தை கடுமையாக அமுலாக்க வலியுறுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் றிசாத் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த டயகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறுவர் துஷ்பிரயோகம், சிறுவர் துன்புறுத்தல், சிறுவர்களை வேலைக:கு அமர்த்தல் என்ற அனைத்தும், சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விடுதல் என்பதனால், அவற்றுக்கு நிபந்தனையின்றி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டியது பொறுப்பு வாய்ந்த சமூகத்தின் கடப்பாடாகும்.
இதுபோன்ற செயற்பாடுகளுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கான ஒன்றிணைந்த வேலைத்திட்டம் அவசியமாகும்.
குற்றவாளிகள் எந்த தராதரத்தை கொண்டிருப்பவராயினும், பாதிக்கப்படுபவர்கள் பிள்ளைகளே என்பதால், அவற்றுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, அதனை பொறுப்புடன் உடனடியாக நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில், 16 வயது சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு எரியுண்ட நிலையில் மரணித்தமை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே, தமது கவலையை வெளியிட்டுள்ளார்.
ஹிஷாலினியின் மரணத்திற்கு நீதி உடனடியாக நிறைவேற்றப்படுவதானது, இதுபோன்ற மேலும் பல சிறுவர்கள் பாதுகாப்புப் பெறுவதற்கு காரணமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.