ஆசிரியர்- அதிபர் சங்கங்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேசப்பட்ட விடயங்கள் இதோ...
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை மீளப்பெறவேண்டும் சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (22) கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
30 அதிபர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதையடுத்து பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் ஜனாதிபதி காரியாலயத்தில் நோக்கி சென்றனர்.
இதன்போது தங்களது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை அவர்கள் ஜனாதிபதி காரியாலய அதிகாரியிடம் கையளித்தனர்.
இந்த நிலையில், ஜனாதிபதியினால் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதியின் சார்பில் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர்கள் இருவர், கல்வி அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தைய நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க உள்ளிட்ட மேலும் சிலர் பங்கேற்றிருந்தனர்.
அதிபர் ஆசிரியர்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முன்வைப்பதாகவும், அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கல்வி அமைச்சில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தையில், இது குறித்த கருத்தாடலை ஏற்படுத்துவதாகவும் இதன்போது பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி, கல்வி அமைச்சர், நிதி அமைச்சர் உட்பட அதிகாரிகளுடன் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாக இதன்போது உறுதியளிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களில் தங்களுடைய கோரிக்கைகளுக்கு சாதகமான பதில் கிடைக்காவிட்டால் தங்களுடைய போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதாக ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கங்கள் எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தன.