பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தீர்மானம்
மனித உரிமைகள் தொடர்பான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்தல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடயம் கையளித்தது.
இந்த நிகழ்வு. நேற்று முன்தினம் (20) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
மனித உரிமைகள், சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் மற்றும் இதுபோன்ற கடுமையான குற்றங்கள் குறித்த முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் அல்லது குழுக்களினால் வெளிக்கொண்டுவரப்பட்ட விடயங்கள் குறித்து விசாரணை செய்தல், அறிக்கையிடல் அல்லது தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, ஜனவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் பெப்ரவரி மாதம் 12ஆம் திகதிகளில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி மூலம், இந்த ஆணைக்குழுவுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஐ தலைவராகக் கொண்ட இந்த ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, ஓய்வுபெற்ற பொலிஸ்மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ, ஓய்வுபெற்ற மாவட்டச் செயலாளர் நிமல் அபேசிறி மற்று யாழ்ப்பாண முன்னாள் மேயர் யோகேஷ்வரி பற்குணராஜா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் உடன்படாத ஆணைக்குழு, பிரித்தானியா உள்ளிட்ட ஏனைய நாடுகள் பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக அறிமுகப்படுத்தியுள்ள சட்டங்களை ஆராய்ந்து, இச்சட்டம் திருத்தப்பட வேண்டும் என்பதை, இவ்விடைக்கால அறிக்கையின் ஊடாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் 9, 11 மற்றும் 13ஆம் பிரிவுகள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ள ஆணைக்குழு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை கூடிய ஜனநாயக முறையில் அமுல்படுத்துவது தொடர்பான மூன்று முன்மொழிவுகளை, இடைக்கால அறிக்கை ஊடாக முன்வைத்துள்ளது.
இச்சட்டத்தின் 9ஆவது பிரிவின் ஊடாகத் தடுத்து வைத்தல் நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் போது, குறைந்தது மூன்று மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் மீது குற்றப் பத்திரங்களைத் தாக்கல் செய்து வழக்குகளை விசாரணை செய்து முடிப்பது குறித்தும் 11ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்குப் பதிலாக, விசேட பாதுகாப்பின் கீழ் அவர்களின் சொந்த வீடுகளிலோ அல்லது கிராமங்களிலோ தடுத்து வைக்கப்படுவதற்கான வாய்ப்பையும் சுட்டிக்காட்டியுள்ளது.
13ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குவதற்காக, குறைந்தபட்சம் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட, அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆலோசனைக் சபையை நியமிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும், ஆணைக்குழு தனது இடைக்கால அறிக்கையின் ஊடாக முன்மொழிந்துள்ளது.
நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வெற்றிகொள்ளும் வகையில், பொறுப்புக்கூறல் மற்றும் மனித வள அபிவிருத்தியை அடைந்துகொள்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் முகவர் நிறுவனங்களோடு ஒத்துழைப்புடன் செயற்படுவது அரசாங்கத்தின் கொள்கையாகும். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை ஜனநாயக மற்றும் சட்ட செயன்முறைக்குள் தீர்ப்பதற்கும் தேவையான நிறுவனச் சீர்திருத்தங்களை மேற்கொண்டு நீதி மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும், அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை, அடுத்த ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிப்பதற்கும் முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் தீர்மானங்களை மதிப்பீடு செய்வதற்கும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. ஜயசுந்தர, ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் டி.டி. உப்புல்மலி, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொழம்பகே மற்றும் ஜனாதிபதியின் சட்டத்துறைப் பணிப்பாளர் நாயகம் உயர் நீதிமன்ற சட்டத்தரணி ஹரிகுப்த ரோஹனதீர ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2021.07.21