வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு!

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு!

வேலையற்ற படடதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்குவது தொடர்பான பிரச்சினைக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு காணப்படும் என்று ஒன்றிணைந்த சேவைகளுக்கான பணிப்பாளர் மனோஜ் அமரசிங்க உறுதியளித்துள்ளார் என்று ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் அரசசேவைகள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிசபையில் ஒன்றிணைந்த சேவைகளுக்கான பணிப்பாளரை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தைச் சார்ந்த கொஸ்வத்த மஹாநாம தேரர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ், அநீதி இழைக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, அவர்கள் வழங்கப்பட்ட மேன்முறையீடு தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது குறித்து கலந்துரையாடினோம்.

தற்போது நாட்டில் நிலவும் நிலைமையினை கருத்திற்கொண்டு குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மேன்முறையீடு தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எனினும் விரைவில் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. இம்மாதம் நிறைவடைவதற்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் பணிப்பாளர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் பட்டதாரிகள் பாரிய அழுத்தங்களுக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதனூடாக மாத்திரமே அவ்வழுத்தங்களில் இருந்து மீட்டெடுக்க முடியும். எனவே அவர்களுக்கான தொழில்வாய்ப்பினை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் அறிவுறுத்தினோம்.

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை பெற்றுக்கொடுப்பதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த போராட்டம் வெற்றியளிக்கும் என்று நாம் நம்புகிறோம்.

வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினை தொடர்பில் நாம் தொடர்ந்தும் இவ்வாறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்திய நிலையம் என்றவகையில் உரிமைகளை வென்றெடுக்க போராடுவோம் என உறுதியளிக்கிறோம்! நீங்களும் எம்மோடு தொடர்ந்தும் இணைந்திருங்கள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image