ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குக- இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்
ஆசிரியர் உதவியாளர்களாக நியமனம் பெற்று 6 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் இன்னும் ஆசிரியர் சேவையில் உள்வாங்கப்படாத தமிழ் மொழி மூல ஆசிரியர் உதவியாளர்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவிற்கு கடிதம் மூலமாக இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது என்று என் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதித் தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ம் ஆண்டு பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் வெற்றிடங்களுக்கு 3021 பேர் ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் வழங்கப்பட்டது. இந்த நியமனங்கள் பல கட்டங்களாக வழங்கப்பட்டதுடன்,இவர்களுக்கான கொடுப்பனவாக முதலில் 6000 ரூபாவாகவும் பின்னர் 10,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டது,
வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்வதென்றால் ஆசிரியர் பயிற்சி அல்லது நியமன பாடத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டம்பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 2005ஆம் ஆண்டு இவர்களுக்கு நியமனம் வழங்கிய நல்லாட்சி அரசாங்கம், ஒரே தடவையில் நியமனம் வழங்காமலும் அவர்களுக்கான பயிற்சி அல்லது பட்டம் பெறுவதற்கு வாய்ப்பை செய்து தராமலும் விட்டது இவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதியாகும்.
இவ் ஆசிரிய உதவியாளர்கள் தமது உரிமையை வென்றெடுக்க ஆசிரியர் தொழிற்சங்கங்களுடன் ஒன்றிணைந்து பல பாரிய போராட்டங்களை முன்னெடுத்த போதிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசாங்கமும், மலையக அரசியல்வாதிகளும் இவ்விடயம் தொடர்பாக எவ்வித கவனமும் செலுத்தவில்லை என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இதேவேளை நியமனம் பெற்ற பெரும்பாலானவர்கள் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்து ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்யப்பட்டார்கள். எனினும் 2018/2019 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் பயிற்சியை 2020/09/18 திகதி நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களுக்கு 2021/05/10 ஆம் திகதி இறுதி ஆண்டு பரீட்சை நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்த போதும் பின் காலவரையறையின்றி பிற்போடப்பட்டது.
கொரோனா நோய் பரவலால் ஒன்றரை வருட காலமாக இந்நாட்டின் கல்வி முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இச்சந்தர்ப்பத்தில் கல்வியை மீண்டும் கட்டியெழுப்ப சிரமத்திற்கு மத்தியில் ஆசிரியர் அதிகம் பற்றாக்குறையால் பாதிப்படைந்து காணப்படும் பெருந்தோட்டப் பாடசாலைகளில் 10000 ரூபா எனும் மிக குறைந்த கொடுப்பனவிற்கு பல வருடங்களாக சேவையாற்றும் இவ் ஆசிரியர்களுக்கு அநீதி நிகழ்ந்துள்ளது. இவர்களுக்குரிய இறுதி பரீட்சையை அவர்களின் சொந்த மாவட்டங்களில் நடாத்துதல் அல்லது இவர்களின் துயர நிலையை கருத்தில் கொண்டு ஆசிரியர் சேவை தரம் 3-1 க்கு உள்ளீர்ப்பு செய்யப்படல் வேண்டும் என மிகப் பொறுப்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் சபரகமுவ மாகாணத்தில் சேவையாற்றும் ஆசிரிய உதவியாளர்களின் பிரச்சினை தொடர்பாக கவனம் செலுத்துவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களுக்குரிய பரீட்சையை நடாத்தி ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதுடன்.இன்னும் பல விடயங்கள் கலந்துரையாடுவதற்கு சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடன் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்திற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தரவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் .
சபரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க கையொப்பம் இட்டுள்ளதோடு, இதன்பிரதியை மாகாண கல்வி செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக சங்கத்தின் பிரதித் தலைவர் பிரதீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் .