கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க ரயில்வே திட்ட காரியாலயங்களின் பணிப்பாளர்களை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து 34 ரயில்வே தொழிற்சங்கங்களினால், எதிர்வரும் 30ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளதாக ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் சிந்திக்க தொடங்கொட தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப்புறக்கணிப்புக்கு ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்காக ஸ்ரீலங்கா டெலிகொம், துறைமுகம், தபால், கனியவள கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக அவர் நேற்று முன்தினம் (22) தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சின்கீழ் உள்ள கொழும்பிலுள்ள சனநெரிசல் மிக்க ரயில்வே திட்ட காரியாலயங்கள் ஊடாக பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெறுவதாகவும், இதுகுறித்து இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு உள்ளிட்ட விசாரணை பிரிவுகளிடம் முறையிட்டும் உயர்மட்ட அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அந்த அனைத்து விசாரணைகளும் முடக்கப்பட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்த காரியாலய மோசடி தொடர்பில் இதுவரையில் விசாரணை மேற்கொள்ளப்படாமை, ரயில் பயணச்சீட்டு இலத்திரனியல் மயமாக்கல் திட்டத்தை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்க முயற்சித்தல், ரயில்வே திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமை, ஊழல், மோசடி இடம்பெற்றுள்ள இந்த திட்ட காரியாலயங்களில் பணிப்பாளர்களை நீக்காமை உள்ளிட்ட காரணங்களால் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ரயில்வே இயந்திர சாரதிகள் சங்கம் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் உள்ளிட்ட ரயில்வே துறையின் 34 தொழிற்சங்கங்கள் இதுவரையில் இந்த பணிப்புறக்கணிப்புக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.