இது தொடர்பாக இலங்கை பாராளுமன்றம் பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட நிறுவனங்கள் சில கோப் குழுவுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சில நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் (22) நடைபெற்ற கோப் குழு உறுப்பினர்களின் விசேட கூட்டத்திலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. கொவிட் தொற்றநோய் சூழலில் திட்டமிட்டபடி கூட்டங்களை நடத்தமுடியாமல் உள்ளமை மற்றும் எதிர்வரும் காலத்தில் கூட்டங்களை நடத்திச்செல்லும்முறை தொடர்பில் தீர்மானிப்பதற்காக இக்கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.
இதற்கமைய எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தையும், ஜூலை 07ஆம் திகதி இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்துடன் தொடர்புபட்ட நிறுவனங்களையும் கோப் குழு முன்னிலையில் அழைப்பதற்கும் இக்குழுவின் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
இதன்போது, இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள லிட்ரோ காஸ் லங்கா நிறுவனம் மற்றும் லிட்ரோ காஸ் டேர்மினல் லங்கா நிறுவனம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமைகள் குறித்து விசாரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு மேலதிகமாக ஜலை 08ஆம் திகதி முதல் கடந்த காலத்தில் அழைக்க முடியாமல்போன நிறுவனங்களை மீண்டும் அழைப்பதற்கு கோப் குழுவின் உறுப்பினர்கள் இதன்போது இணக்கம் தெரிவித்தனர்.
பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ள மஹாபொல அறக்கட்டளை நிதியத்தின் கீழ் இயங்கும் மஹாபொல உயர் கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியம் தொடர்பிலும் கோப் குழு கவனம் செலுத்தியது.
இதற்கு மேலதிகமாக தற்பொழுது நிலவும் கொவிட் தொற்றுநோய் சூழலுக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு ஒழுங்கு விதிகளுக்கு அமைய கோப் குழுவின் அமர்வுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இதற்கமைய எதிர்காலத்தில் கோப் குழுவின் விசாரணைகளுக்கு அரச நிறுவனங்களை அழைக்கும்போது அந்நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கணக்காளர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட அமைச்சின் செயலாளரை மாத்திரம் குழுவின் முன்னிலையில் அழைப்பது மற்றும் ஏனையவர்களை ஒன்லைன் முறைமையின் கீழ் இணைத்துக் கொள்வது குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்படவுள்ளது.
கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர்களான சரத் வீரசேகர, சுசில் பிரேமஜயந்த, இந்திக அனுருத்த, டி.வி.சானக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, அனுர திஸாநாயக, இரான் விக்ரமரட்ன, கலாநிதி ஹர்ஷ.டிசில்வா, நளின் பண்டார, எஸ்.எம்.மரிக்கார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மூலம் - News.lk