தலவாக்கலை - வட்டகொடை தோட்டத்தின்  உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை - வட்டகொடை தோட்டத்தின்  உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை - வட்டகொடை தோட்டத்தில் ஜூன் 12ஆம் திகதியன்று கள உத்தியோகத்தர் ஒருவருக்கு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடாத்தியதன் விளைவாக  தோட்டத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்களும், தோட்ட சேவையாளர் சங்கத்தின் உறுப்பினர்களும் எதிர்ப்பில் ஈடுப்பட்டனர்.

வட்டக்கொடை தோட்டத்தின் கள உத்தியோகஸ்தர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து, கள உத்தியோகஸ்தர்களும் ஏனைய உத்தியோகஸ்தர்களும் 14.06.2021 திங்கட்கிழமை தோட்ட காரியாலயத்திற்கு முன்னால் பதாதைகள் ஏந்தியவாரு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

தாக்குதலுக்கு உட்பட்ட கள உத்தியோகஸ்தர், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், நுவரெலியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளார்.

தொழிற்சங்கத்தின் தலைவரான அந்தக் கங்காணிக்கு எதிராக, தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டுக்கு ஏற்ப கைது செய்யப்பட்ட குறித்த கங்காணி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வருடத்துக்கு ஒரு தடவை தேயிலை மலைகளில் நிரைகள் மாற்றப்படும். இந்த மாற்றத்தின் போது குறிப்பிட்ட அந்த தோட்டத் தலைவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் நிரை பிரிப்பில் சில சலுகைகள் கோரப்பட்டுள்ள போதும் அது நிறைவேற்றப்படவில்லை என்பதிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

எனினும், நிரைகளைப் பிரித்துகொடுத்து, ஒருவாரம் கடந்துவிட்ட நிலையிலேயே கடந்த 12ஆம் திகதியன்று, அந்த மலைக்கு பொறுப்பாகவிருந்த கள உத்தியோகஸ்தருடன், மேற்படி தோட்டத்தலைவர் முரண்பட்டு கள உத்தியோகத்தரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

இதன் காரணமாக கள உத்தியோகஸ்தரின் ஒரு பக்க காதும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மேற்படி விவகாரம் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்கள் மீதான தொழிலாளர்களின் அடாவடித்தனங்கள் குறித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் என இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image