சிறுவர்களை வேலையில் அமர்த்துவதற்கான வயது 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித வித்யாபத்திரன தெரிவித்துள்ளார்.
இதுவரை 14 ஆக இருந்த வயதெல்லையே தற்போது 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
16-18 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் வாழ்க்கை, சுகாதாரம், கல்வி, ஒழுக்க வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படாத வகையான தொழில்களில் மாத்திரம் ஈடுபடுத்த முடியும் என்று அதிகாரசபையின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர்களை பாதுகாப்பற்ற, இரவு பணிகளில் ஈடுபடுத்த முடியாது. அதேபோல் பிள்ளைகளை யாசகத்திற்கு பயன்படுத்தும் பெற்றோர்கள், பாதுகாவலர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டம் 228 சரத்தின் கீழ் 5 வருட சிறைத்தண்டனை வழங்க முடியும். பிள்ளைகளை வீதியோர வியாபாரங்களில் ஈடுபடுத்துதல், சர்க்கஸ் உட்பட பொழுதுபோக்கு விடயங்களுக்கு பயன்படுத்தி பணம் சம்பாதித்தல், பிள்ளைகளூடாக போதைபொருள் மற்றும் மது விற்பனை மேற்கொள்ளல், விபசாரத்திற்கு பயன்படுத்தல் போன்ற குற்றங்கள் சட்டப்படி குற்றம் என்றும் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் சைபர் தொழில்நுட்பத்தினூடாக பிள்ளைகளை விற்பனை விடயங்களுக்கு பயன்படுத்துதலும் குற்றமாகும்.
எந்தவொரு இடத்திலும் 16 வயதுக்கு குறைந்த குழந்தை தொழிலாளர்கள் பணியாற்றுவதை கண்டால் அல்லது 16- 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அபாயகரமான, பாதுகாப்பற்ற பணிகளில் ஈடுபடுத்துவதை கண்டால் அல்லது கேள்விப்பட்டால் உடனடியாக தேசிய சிறுவர் அதிகாரசபையின் 1929 என்ற உடனடி இலக்கத்திற்கு அல்லது 1929 சிறுவர் பாதுகாப்பு செயலிக்கு தெரியப்படுத்துமாறும் அதிகாரசபை பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.