கிழக்கு பிரதி சுகாதார பணிப்பாளர் பிரிவினையை ஏற்படுத்துகிறார்- ரவி குமுதேஷ்

கிழக்கு பிரதி சுகாதார பணிப்பாளர் பிரிவினையை ஏற்படுத்துகிறார்- ரவி குமுதேஷ்

  கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் இனங்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் அவரை அப்பதவியில் இருந்து நீக்குமாறு போராட்டங்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் தலைமையில் வாழைச்சேனை மருத்துவமனை விவகாரத்தை வைத்தும், தனது கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் ஆர்ப்பாட்டம் செய்திருப்பதாக குறிப்பிட்ட ரவி குமுதேஷ், அதற்கெதிராக கிழக்கு ஆளுநர் நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து வெளியிட்டபோது,

“இன்றைய தினம் கிழக்கு மாகாண பிரதி சுகாதாரப் பணிப்பாளர் ஒருவர் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்து ஊடகங்களுக்கும் புகைப்படங்களை வெளியிட முயற்சித்திருக்கின்றார். அதில் என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்கு எதிராக எதிர்ப்பு வெளியிடும் வகையில் இதனை ஏற்பாடு செய்ததாகவும் அவர் கூறியிருக்கின்றார். கிழக்கு பிரதி சுகாதார பணிப்பாளர், அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு மத்தியில் பிழையான கருத்தை வெளியிட்டுள்ளார். என்னால் வெளியிடப்பட்ட கருத்தை சரியாக புரிந்துகொள்ளாமல் திரிபுபடுத்தி அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட நண்பர்கள் மற்றும் குறித்த பிரதி பணிப்பாளருடன் வர்த்தகத்தில் ஈடுபடுவோரே இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். விசேடமாக இனவாத கருத்தை ரவி குமுதேஷ் வெளியிட்டதாக கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்திருக்கும் கருத்தானது அவரது சொந்தக் கருத்தாகும்.

வாழைச்சேனை மருத்துவமனையிலுள்ள சிங்கள பணிக்குழாமுக்கு தமிழ் மொழியில் கடிதங்களை வழங்கி ஒழுக்காற்று அதிகார நடவடிக்கை என்பதை தெரிவித்து பழிவாங்குவதற்காக இவ்வாறு கிழக்கு சுகாதார பிரதிப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்திருக்கின்றார். குறித்த பணியாளர்களை சிரமத்திற்குள் தள்ளுவதற்காக அவர் இனம், மொழி என்பதை அவர் பயன்படுத்தியுள்ளார். எந்தவொரு தமிழ் அதிகாரிக்கு சிங்கள மொழியில் கடிதம் வழங்கி தண்டனை மற்றும் உத்தரவுகளை வழங்குவதானது மிகவும் தவறாகும். அதேபோல சிங்கள உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் குறிப்பிட்டு தண்டனை அளிப்பதானது அதுவும் பிழையான விடயம். விசேடமாக தண்டனை அளிக்கின்றபோது அதற்கான காரணத்தை கோருவதற்கான சந்தர்ப்பமும் மறுக்கப்பட்டு கடிதமொன்றை வழங்குகின்ற கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளர், மாகாண ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கின்ற அதிகாரம் தம்மிடத்தில் இல்லை என்பதை மறந்துவிட்டார்.

அதனால் சுகாதார பணியாளர்களுக்கு ஒன்றைக் கூறுகின்றோம். மாகாண சபைகளிலுள்ள சில நிர்வாகம், நிறுவனக் கோவை தெரியாதவர்கள் பிரதி சுகாதாரப் பணிப்பாளர் கூறும் வகையில் செயற்பட வேண்டாம். சுகாதார செயலாளர் அல்லது அவருக்கு மேல் அதிகாரிகளுக்கே ஒழுக்காற்று சார்ந்த அதிகாரம் உள்ளது. குறைந்த பட்சம் அதனைக்கூட தெரிந்து வைத்திருக்காத பிரதி சுகாதார பணிப்பாளர் மருத்துவமனை ஒன்றுக்கு சென்று, தனக்கு தெரிந்த வகையில் விசாரணை செய்து, காரணம் கேட்காமல் தான்தோன்றித்தனமாக இடமாற்றங்களை வழங்க அதிகாரம் இல்லை. அதனை தடுப்பதற்கு சொன்னாலும் ஆர்ப்பாட்டம் செய்து புகைப்படங்களை வெளியிட்டு இதனை தடுக்கவும் முடியாது.

ஆகவே கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளரை வீட்டிற்கு அனுப்பும் வகையிலான ஆர்ப்பாட்டங்களை நாம் கிழக்கிலும் செய்ய முடியும். தற்போதும் இந்த பிரதி சுகாதாரப் பணிப்பாளர் செயற்படுகின்ற முறையானது மக்களின் ஐக்கியம் மற்றும் இனங்களுக்கு இடையிலான சமாதானத்திற்கு சீர்குலைவாகும். இன்று தமிழ் அதிகாரிகளுக்கு பொய்யான விடயத்தைக் கூறி இனவாத ரீதியிலான ஒன்றுக்காக வீதிகளில் அவர்களை அழைத்து வந்து, ஆர்ப்பாட்டம் செய்திருப்பது தவறான செயலாகும். அந்த அறிவித்தலும் பிழையானது. அகவே இப்படிப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கிழக்கு மாகாண அதிகாரிகளிடம் கேட்கின்றேன்.

நான் சிங்கள மொழியில் செய்த உரையை திரிபுபடுத்தி மாகாண சபைகளிலுள்ள அதிகாரிகள் ஊடாக இவ்வாறான செயற்பாட்டை நடத்தியிருப்பதன் ஊடாக மாகாண மட்டத்திலான ஐக்கியத்திற்கே சவாலாக அமைகிறது. இந்த இனவாத ரீதியில் செயற்பட்டுள்ள கிழக்கு பிரதி சுகாதாரப் பணிப்பாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதோடு அவரது செயற்பாட்டிற்கான முழு பொறுப்பையும் அவருக்கு மேலிடத்திலுள்ள அதிகாரிகளே ஏற்க வேண்டும். இல்லாவிட்டால் மாகாண சபை ஒற்றுமை, ஐக்கியத்திற்காக பிரதி சுகாதார பணிப்பாளரை நீக்கும் வரை போராட்டங்களை நடத்த வேண்டியேற்படும். கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அதிகாரிகளிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம் - என்று தெரிவித்தார்.

அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்கத்தின் தலைவரான ரவி குமுதேஷ் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றுமுன்தினம் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image