கடமையில் ஈடுபடாத கிராமசேவையாளர் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருஸ்ணபுரம் பகுதயில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண் கிராம சேவையாளரே இவ்வாறு உரிய சேவையை வழங்குவதில்லை என பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த கிராம சேவையாளர், கடமை நேரத்தில் அலுவலகத்திற்கு சமூகம்தருவதில்லை எனவும், இதனால், தமது தேவைகளிற்காக அலுவலகம் சென்று ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும் பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான நிலையில் குறித்த விடயம் கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.'
குறித்த முறைப்பாட்டை அடுத்து பிரதேச செயலாளர் நேற்று (08) கள விஜயம் மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டார். தொடர்ந்து அங்கு கடமையில் இருந்த சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிடமும், கிராம சேவையாளரின் கடமை நேரம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் பொதுமக்களின் முறைப்பாட்டை உறுதி செய்துக்கொண்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கரைச்சி பிரதேச செயலாளர் பாலசுந்தரம் ஜெயகரன்,
பொதுமக்களால் குறிப்பிடப்பட்ட முறைப்பாடு தொடர்பில் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தேன். அதற்கு அமைவாக இன்றைய தினம் அவர் கடமைக்காக அலுவலகத்தில் இருந்திருக்கவில்லை. அவரை தொலைபேசி ஊடாக வினவியபோது, தான் இன்று கடமைப்பு சமூகம்தரவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், விசாரணைக்கு அவரை பிரதேச செயலகத்திற்கு அழைத்துள்ளோம். பிரதேச செயலகத்தினால், விசாரணை நடத்தி, அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.