வாக்குறுதியை மீறிய அமைச்சர்: மற்றுமொரு சுகாதார தரப்பும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்

வாக்குறுதியை மீறிய அமைச்சர்: மற்றுமொரு சுகாதார தரப்பும் பணிப்புறக்கணிப்புக்கு தயார்
சுகாதார அமைச்சினால், சுகாதார பணி குழுவினருக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் இரட்டை நிலைப்பாடு பின்பற்றப்பட்டு வைத்திய பணி குழுவினருக்கு மாத்திரம் மேலதிக சேவை கொடுப்பனவுக்கு பரிந்துரைக்கப்பட்டமைக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது.
 
இது குறித்து அந்த ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளதாவது,
 
குறித்த விடயம் தொடர்பில் எங்களது ஒன்றியம் மே மாதம் 12ஆம் திகதி தங்களுடனும், ஜூன் 3ஆம் திகதி சுகாதார அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
 
இதன்போது அனைத்து சுகாதார பணிக் குழுவினரையும் பிரித்து கொடுப்பனவுகளை அதிகரிப்பததோ அல்லது பாகுபாடான முறையில் நடத்தப்படவோ கூடாது என்பது சுட்டிக்காட்டப்பட்ட நிலையில், அவ்வாறு இடம்பெற மாட்டாது என இணக்கம் காணப்பட்டது.
 
இந்த நிலையில் இன்றைய தினம் பத்திரிகை அறிக்கையின் அடிப்படையிலும், எங்களுக்கு கிடைத்துள்ள உள்ளகத் தகவல்களின் அடிப்படையிலும் வைத்திய பணி குழுவினருக்கு மாத்திரம் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு பரிந்துரைத்து அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்று முன்வைமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் குறித்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 11ஆம் திகதி காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக  நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

Author’s Posts