தடுப்பூசி வழங்கப்படும் - தொழிற்சங்க நடவடிக்கை வேண்டாம் என அரச உத்தியோகத்தர்களிடம் கோரிக்கை
கொவிட்-19 தடுப்பூசி ஏற்றலின்போது மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமையளிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எனவே, தற்போதைய சந்தர்ப்பத்தில், தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லாமல், பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை வினைத்திறனுடன் வழங்குமாறு தமது அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களிடமும், பிரதிநிதிகளிமும் உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தவினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் பணியாற்றும் மாவட்ட மற்றம் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பணிக்குழாம், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்களை உள்ளீர்க்கும் வகையில், தடுப்பூசி வழங்குவதற்காக, அடுத்தக்கட்டத்தில் முன்னுரிமையளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ஸவினால், சுகாதார அமைச்சரிடமும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயத்திடமும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பில், ஜனாதிபதி, பிரதமர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் ஆகியோரின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நேற்று கிடைப்பெற்ற தடுப்பூசிகளில் முன்னுரிமை அடிப்படையில், குறித்த அனைத்து உத்தியோகத்தர்களையும் உள்ளீர்க்கும் வகையில், தடுப்பூசி ஏற்றம் இடம்பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, தற்போதைய சந்தர்ப்பத்தில், தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்லாமல், பொதுமக்களுக்கு அவசியமான சேவைகளை வினைத்திறனுடன் வழங்குமாறு உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்தவினால் சம்பந்தப்பட்ட தரப்பினரி;டம் கோரப்பட்டுள்ளது.