மே மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தரப்பினருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாhக அரச சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நேற்று (10) அமைச்சுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் இணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மே மாதம் 7ஆம் திகதியை போன்று இன்றும் (10) நாங்கள் அரச சேவைகள் அமைச்சுக்கு சென்றோம். பெயர் விடுபட்ட வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் அறிந்து கொள்வதற்கும், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நாங்கள் இன்று அங்கு சென்றோம்.
இன்றைய தினமும் நாங்கள் அதிகாரிகள் அதிகாரிகளை சந்தித்தோம். மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் மேன்முறையீட்டுக்கு விண்ணப்பித்திருந்த வேலையற்ற பட்டதாரிகளுக்கு மே மாதத்திற்குள் நியமனம் வழங்கப்படுவதாக அவர்கள் உறுதிப்படுத்தினர்.
எவ்வாறிருப்பினும் அவர்கள் அனைவருக்கும் பயிலுனர் பயிற்சிக்காக உள்நுழைவதற்கு அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் நினைக்கின்றோம்.
இந்த விடயம் தொடர்பில் நாங்கள் அமைச்சுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம். எனவே பெயர்கள் விடுப்பட்டு, நியமனம் கிடைக்கப்பெறவேண்டிய நபர்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். – என்று தெரிவித்துள்ளார்.
இதையும் வாசியுங்கள் வேலையில்லா பட்டதாரிகள் போராட்டத்திற்கு மீண்டும் வெற்றி கிட்டுமா?