கொவிட் சூழலில் பயிலுநர் பட்டதாரிகளின் நிலை என்ன?

கொவிட் சூழலில் பயிலுநர் பட்டதாரிகளின் நிலை என்ன?

இன்னமும் நிரந்தர நியமனம் பெறாத 52 ஆயிரத்துக்கும் அதிகமான பயிலுநர் பட்டதாரிகளுக்க கொவிட் 19 சூழலில் பணியாற்றுவது தொடர்பில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்ன என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.

நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

கொவிட் பரவலுக்கு மத்தியில் அரச சேவையத் தடையின்றி நடாத்திச் செல்லல் தொடர்பாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. சந்திரசிறி கையெழுத்துடன் வௌியிட்டுள்ள சுற்றுநிரூபம் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஏப்ரல் 27 ஆம் திகதி அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதாவது அரச சேவையை இடையூறின்றி நடந்து செல்வது தொடர்பில் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றின் மூன்றாம் அலை இதுவாகும். முதலாம் மற்றும் இரண்டாம் அலைகளின்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் சில தெளிவுகள் காணப்பட்டன. சில தரப்பினர்கள் தொடர்பில் விசேட தலையீடுகள் இருந்தன. ஆனால் ஏப்ரல் 27-ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.பல்வேறு தரப்பினர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஒவ்வொரு நிறுவனங்களின் பிரதானிகளும் ஒவ்வொரு கருத்தில் இருக்கின்றனர். நிரந்தர சேவையாளர்களுக்கு அமையவே இந்த சுற்றறிக்கையை செயல்படுத்துமாறு விவசாயத் திணைக்களத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதுவரையில் நிரந்தர நியமனம் கிடைக்கப்பெறாத பயிலுனர் பட்டதாரிகள் பெருமளவானோர் அரச சேவையில் உள்ளனர். உதாரணமாக 52 ஆயிரத்துக்கும் அதிகமான பயிலுநர் பட்டதாரிகள் உள்ளனர். அவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் என்ன? அவர்கள் அரச சேவையில் இல்லையா? என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.

இதேநேரம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பில் கடந்த முறை வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபத்தில் சில சாதகமான யோசனைகள் இருந்தன. அருகிலுள்ள சேவை நிலையத்திற்கு சேவைக்கு இணைத்தல் அல்லது அவர்களுக்கு உரிய போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் என்பன குறிப்பிடப்பட்டிருந்தன. ஆனால் இந்த சுற்றறிக்கையில் அது ஒன்றுமில்லை. இது குறித்து வினவியபோது அவற்றை நிறுவன தலைவர் பிரதானிகள் பார்த்துக் கொள்வார்கள் என அமைச்சின் செயலாளர் கூறுகின்றார். அவ்வாறாயின் விடயங்களை குறிப்பிட்டு சுற்றறிக்கை ஒன்று வெளியிட வேண்டிய அவசியமில்லை அமைச்சின் செயலாளர் ஒருவரும் அவசியமில்லை நிறுவன பிரதானிகளுக்கு தீர்மானம் மேற்கொள்ள முடியும் தானே.

தற்போது கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் அரச சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளன. அவர்களது வாழ்க்கை அபாயத்தில் உள்ளது. அதுமாத்திரமன்றி பிறக்கவிருக்கும் குழந்தையின் வாழ்க்கையும் அபாயத்தில் உள்ளது.

இதேநேரத்தில் சேவைக்கு சமூகமளித்தல் அல்லது சேவை நிறைவடைந்து செல்லல் என்பன தொடர்பில் எவ்விதமான விலக்களிப்புகளும் இல்லை. வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன. அவர்களுக்கு சாதகமான யோசனைகள் இங்கு இல்லை.

எனவே, இந்த தொற்று நோய் பரவலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்களை பாதிப்புக்கு உள்ளாக்காமல் முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறோம். அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறாக செய்யப்படுமாயின் அரச மற்றும் தனியார் துறைசார் அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து நடவடிக்கை ஒன்றுக்கு செல்வதற்கு நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image