இலங்கை துறைமுக நகர அதிகாரசபை சட்டமூலத்திற்கு மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம்- தொழிற்சங்கங்கள்

இலங்கை துறைமுக நகர அதிகாரசபை சட்டமூலத்திற்கு மக்கள் கருத்துக் கணிப்பு அவசியம்- தொழிற்சங்கங்கள்

​கொழும்பு துறைமுக நகர பொருளாதார அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொள்ளுமாறும் குறித்த சட்டமூலம் நாட்டின் அரசியல் யாப்பை மீறும் செயல் என்றும் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 22ம் திகதி கொழும்பு 5 இல் அமைந்துள்ள ஜானகி ஹோட்டலில் தொழிற்சங்கங்கள் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.

சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை சங்கம், சுதந்திர ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக கைத்தொழில் மற்றும் பொது ஊழியர்கள் சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் மற்றும் இலங்கை கடற்சேவையாளர் தேசிய சங்கம் ஆகியவற்றின் தலைவர்கள் கலந்துகொண்ட இவ்வூடகவியலாளர் சந்திப்பில் குறித்த சட்டமூலமானது உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகள் எவ்வாறு பாதிப்படைகிறது, தொழிற்சங்கங்கள் என்றவகையில் தாம் செயற்படவேண்டியதன் அவசியம் மற்றும் எவ்வாறு செயற்பட திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறித்த விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்தினூடாக துறைமுக நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ள விசேட பொருளாதார வலயத்தின் கட்டுப்பாட்டு அதிகாரசபையான துறைமுக நகர அதிகாரசபையானது இலங்கை அரசியலமைப்பினை கருத்திற்கொள்ளாது இயங்கக்கூடிய அதிகாரத்தை வழங்குவதாகவும் திரைசேரி நாட்டின் வருமானத்தை அறவிடுவதை பாரியளவு குறைக்கும் வகையிலானதாகவும் காணப்படுகிறது. மேலும் நிலப்பரப்பை எவ்வாறு பயன்படுத்துவது என்ற அதிகாரம் குறித்த அதிகாரசபையைச் சார்ந்தது. சம்பளம் இந்நாட்டில் பயன்படுத்தும் பணத்தில் வழங்கப்படாத வகையிலும் இலங்கை நகர அபிவிருத்தி அதிகாரசபை, எந்தவொரு மாகாண கட்டுப்பாட்டு நிறுவனமாகவோ, மாகாணசபைக்கு கீழியங்கும் வகையிலோ இயங்காது என்பதுடன் பாராளுமன்றிற்கு பொறுப்பு கூற வேண்டிய அவசியமற்ற வகையில் சுதந்திரமாக இயங்கும் வகையில் சட்டங்களை மாற்றி செயற்படும் வகையிலான அதிகாரம் இவ்வதிகாரசபைக்கு உள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் தொழிலாளர் உழைப்பை சுரண்டல், பெண் தொழிலாளர்கள் மீதான சுரண்டல்கள் என்பவற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் இத்தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் தொழில் அமைச்சர் கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுக்க முடியாது. தொழில் திணைக்களத்தினால் சேவை விதிமுறைகள், தொழிலாளர் உரிமைகள், சேவை தரம் கண்காணிப்பு, ஆணையிடல், முறைப்பாடுகளை விசாரித்தல் போன்ற எந்தவொரு அத்தியவசிய செயற்பாட்டுக்கும் குறித்த சட்டமூலத்தில் இடம் வழங்கப்படவில்லை.

எனவே, தொழிற்சங்கம் என்றவகையில் நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் கொழும்பு துறைமுக ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்குவது தொடர்பில் உயர் நீதிமன்றில் விளக்கமளிக்க எதிர்பார்த்துள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

உயர் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மனுவினூடாக நாட்டின் அரசியலமைப்புக்குட்பட்டதாக குறித்த சட்டமூலத்தை மாற்றியமைத்த முடியாவிட்டால் பாராளுமன்றில் மூன்றில் இரண்டு விருப்பு ஆதரவு அல்லது பொது மக்கள் கருத்துக் கணிப்பினூடாக நிறைவேற்றப்பட்டு நீதினமன்ற தீர்ப்பு வழங்கப்படுவது அவசியமாகும் என்றும் இதன்போது தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image