ஆயிரம் ரூபா கையில் கிடைக்கும் நாளே மகிழ்ச்சியான நாள்- இராதாகிருஷ்ணன்
ஆயிரம் ரூபா சம்பளம் கையில் கிடைக்கும் நாளே சந்தோசமான நாள், அதை விடுத்து கடந்த நாட்களில் நடைபெற்ற கேக் வெட்டுதல், பால் சோறு ஆக்குதல் என்பன சந்தோசமாக அமையாது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னனியின் சர்வதேச மகளிர் தின நிகழ்வு முன்னனியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் , கடந்த காலங்களில் கூட்டு ஓப்பந்தம் ஊடாக சம்பளம் நிர்ணயித்த நிலையில் தற்போது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்தே அரசு சம்பள நிர்ணய சபையூடாக ரூபா 900 மற்றும் ரூபா 100 என்று ரூபா 1000 பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்நிலையில் ஆயிரம் ரூபா சம்பளத்தில் எத்தனை நாட்கள் வேலை வழங்குவார்கள் என்பதே பெரும் கேள்விக் குறியாகவுள்ளது. மாதத்தில் 12 தொடக்கம் 15 நாட்கள் வேலை வழங்கி விட்டு ரூபா 15000 மாத சம்பளம் என்றால் இந்த சம்பளம் கிடைப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை அதற்கு பழைய சம்பளமே மேல் என்று தோன்றும்.
ஆகவே கூட்டு ஒப்பந்தமும் நடைமுறையில் இருக்க வேண்டும் அதனை பயன்படுத்தி தொழிலாளர்களின் ஏனைய நலன்களை கவனிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. கடந்த காலங்களில் தொழிற்சங்கத்திற்கும் முதலாளிமார் சம்மேளத்திற்கும் என இரு தரப்பு ஒப்பந்தம் இருந்தது. அது 1992ஆம் ஆண்டு முதல் அமுலில் இருந்தது. ஆனால் இன்று அரசு இதில் தலையிட்டு சம்பளத்தை பெற்றுக் கொடுத்திருப்பதால் எதிர்காலத்தில் இதனை முத்தரப்பு ஒப்பந்தமாக செய்தால் தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக அரசிடமும் பேசி தீர்வுகளை பெற்றக் கொள்ள வாய்ப்பாக அமையும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னனியின் தலைமை காரியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு; விசேட அதிதியாக பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளரான சோபனா இராஜந்திரனும் விஷேட அதிதியாகவம் முன்னணியின் செயலாளர் பேராசிரியர் எஸ். விஜயசந்திரன் உட்பட முன்னனியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.