பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அறிவிப்புக்கான வர்த்தமானி விரைவில்

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அறிவிப்புக்கான வர்த்தமானி விரைவில்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தல் 2, 3 நாட்களில் வெளியாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (2) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொழில் ஆணையாளர் நாயகத்தினால் இன்று கையளிக்கப்பட்ட வேதன நிர்ணய சபையின் தீர்மானம், நியாயமானது என்பதனால், அதனை அங்கீகரித்து, உடனடியாக வர்த்தமானிப்படுத்த தீர்மானித்ததாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2, 3 நாட்களுக்குள் அந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும். பெருந்தோட்டத் தொழிலாளர்கள் நீண்ட காலமாக எதிர்ப்பார்த்திருந்த ஆயிரம் ரூபா வேதனத்தை அன்று முதல் கட்டாயமாக வழங்கவேண்டிய நிலை பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஏற்படும். அவ்வாறு வழங்காவிட்டால், தொழிற்திணைக்களம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு முன்னதாக அடிப்படை வேதனமாக 700 ரூபாய் வழங்கப்பட்டது. அத்துடன் மேலதிக கொடுப்பனவாக 50 ரூபாவும், ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 161 ரூபாவும் வழங்கப்பட்டது. இதன்படி நாளாந்த வேதனமாக 911 ரூபாய் வழங்கப்பட்டது. இந்தநிலையில், புதிய தீர்மானத்தின்படி, நாளாந்த வேதனமாக 900 ரூபாவும் பாதீட்டுக் கொடுப்பனவாக 100 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி கொடுப்பனவாக 230 ரூபாவை பெருந்தோட்ட நிறுவனங்கள் செலுத்த வேண்டும். இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,230 ரூபாவாக வேதனம் அதிகரிக்கும். முன்னரை விடவும் நாளாந்தம் 319 ரூபாய் வேதன அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வேதனத்தில் இது 35 வீத அதிகரிப்பாகும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த வேதன அதிகரிப்புடன், அதன் சராசரிக்கு அமைய, பணிக்கொடை கொடுப்பனவு அதிகரிப்பதுடன், மேலதிக கொடுப்பனவு விடுமுறைக் கொடுப்பனவு, மகப்பேற்றுக் கொடுப்பனவு என்பனவும் அதிகரிக்கும்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image