சம்பள நிர்ணய சபையா? கூட்டு ஒப்பந்தமா? மதில் மேல் பூனையாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்

சம்பள நிர்ணய சபையா? கூட்டு ஒப்பந்தமா? மதில் மேல் பூனையாக பெருந்தோட்ட தொழிலாளர்கள்

 கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போதே சம்பள நிர்ணய சபையூடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியுமா? அவ்வாறு அதிகரிக்கப்படுமானால் கூட்டு ஒப்பந்தத்தில் இருக்கும் சரத்துகளுக்கும் என்ன நடக்கும் என்பதை நோக்கியே அனைவரினதும் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

இந்நிலையில் கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது சம்பள நிர்ணய சபை தலையிடுவதற்கு அதிகாரம் இல்லை என்று மக்கள் தொழிலாளர் சங்கம், இலங்கை கமியூனிஸ்ட ஐக்கிய கேந்திரம் என்பவற்றின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் சம்பள நிர்ணய சபையின் தீர்மானத்திற்கு இணங்கினாலும் சட்டரீதியாக இதனை அவர்கள் மறுக்கலாம் காரணம் கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் போது சம்பள நிர்ணய சபை வழுவானதா? என்ற அடிப்படையில் சட்டரீதியாக பெருந்தோட்ட கம்பனிகளுக்க அணுக முடியும்.

இந்த கோணத்தில் நாம் பார்த்தால் கூட்டு ஒப்பந்தத்தில் இழுபறிகள் இருப்பதாக காரணம் காட்டி சம்பள நிர்ணய சபைக்கு செல்வது என்பது இன்னொரு வகையான ஏமாற்றுதான். ஆகவே இப்போது பெருந்தோட்ட தொழிலாளர்கள் சம்பளம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது மேலும் சிக்கலை உருவாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆகவே இந்த சம்பள நிர்ணய சபையினால் தீர்மானிக்கப்பட்ட இந்த சம்பள விடயம் சட்ட ரீதியானதா? என்ற பார்த்தால் இது முழுக்க முழுக்க இன்னொரு வகையான காட்டிக் கொடுப்பாகவே காணப்படுகின்றது என்றார்.

அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தை இரத்து செய்து விட்டு சம்பள நிர்ணய சபைக்கு சென்றால் அங்கு இலங்கை நாட்டில் ஆக குறைந்த சம்பளம் ரூபா 450 என்ற சட்டமே உள்ளது. இதனை நிவர்த்தி செய்யவதாக இருந்தால் ஆகக்குறைந்த சம்பளம் ரூபா 1000 என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் அல்லது பெருந்தோட்ட துறைக்கான ஆக குறைந்த சம்பளம் ரூபா 1000 என்ற சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் சட்டத்தரணி என்றம் குறிப்பிட்டார்.

இந்நிலையில் சம்பள நிர்ணய சபையில் ஆகக்குறைந்த சம்பளம் நிர்ணயிக்கப்படுமானால் கூட்டு ஒப்பந்தத்தின் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த ஏனைய விடயங்கள் தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டி ஏற்படும் என்று பெருந்தோட்ட சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் ரொசான் இராஜதுரை தெரிவித்திருந்தார்.
மேலும் இரண்டு சட்டங்களுக்கு தம்மால் கட்டுப்பட முடியாது என்றும் இதுவரைக் காலமும் கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே நடவடிக்கைகள் இடம் பெற்று வந்ததாகவூம் எனவே அதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விடயம் சம்பள நிர்ணய சபையின் தீர்மானமா? அல்லது கூட்டு ஒப்பந்தமா? என்ற மதில் மேல் பூனையாக தோட்ட தொழிலாளர்களின் நிலை மாறியூள்ளது. இவர்களுக்கான நியாயத்தை இவர்கள் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கங்களும் இந்த தொழிலாளர்களின் வாக்குகளின் மூலம் பாராளுமன்றத்தை அலங்கரிக்கும் உறுப்பினர்களும் பெற்றுக் கொடுப்பது எப்போது?

(மா.பிரபா)

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image