வேலை நாட்களைக் குறைத்தால் கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை - ஜீவன்

வேலை நாட்களைக் குறைத்தால் கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை - ஜீவன்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால் அதற்கு பதிலடி கொடுக்க இ.தொ.கா தயாராக இருக்கிறது என்று அதன் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள சௌமியபவனில் இன்று நண்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ள அவர், மேலும் தெரிவிக்கையில்,

பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக நேற்றைய தினம் சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை மற்றும் வாக்கெடுப்பின் பின்னர் 1000 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.

வேலை நாட்கள் குறைக்கப்பட்டால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும். எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வேலை நாட்கள் குறைக்கப்படாது என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் உறுதியளித்ததுடன் இது தொடர்பில், அரசாங்கமும் தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளது எனபதையும் தெரிவித்தேன். அதையும் மீறி வேலை நாட்களைக் குறைக்கும் நடவடிக்கையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஈடுபடுமாக இருந்தால் அதற்கு பதிலடி கொடுக்க இ.தொ.கா தயாராக இருக்கிறது என்றும் அந்தப் பதிலடி ஆயிரம் ரூபாய் நாள் சம்பளத்தை வழங்குவதையும் விட மோசமான பாதிப்பைக் கம்பனிகளுக்கு ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கையும் விடுத்தேன் - என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், இ.தொ.காவின் பிரதி தலைவர் அனுஷா சிவராஜா, உபதலைவர் மாரிமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image