ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் தோட்ட சேவையாளர் சங்கம்

ஆயிரம் ரூபா சம்பள கோரிக்கைக்கு ஆதரவளிக்கும் தோட்ட சேவையாளர் சங்கம்

தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் கோரி இன்று (05) நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் அடையாள வேலைநிறுத்தத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் எஸ். ஆர். சந்தரமதன் தெரிவித்துள்ளார்.

இவ்வளவு காலம் 700 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்கிய பெருந்தோட்டக் கம்பனிகள் தற்போது 725 ரூபா வழங்குவது என்ற தீர்மானத்திற்கு வந்துள்ளன. ஒரு யாசகர் நாளொன்று 25 ரூபாவுக்கு அதிகமாக சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. 25 ரூபாவால் என்ன வாங்க முடியும்? கம்பனிக்காரர்களும் சரி, மேலதிகாரிகளும் சரி என்ன அடிப்படையில் தோட்டத் தொழிலார்களை இந்தளவுக்கு இழிவாக நினைத்து அடிப்படை சம்பளத்தில் 25 ரூபா அதிகரிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவருடைய தேர்தல் பிரசாரம் கொட்டகலையில் நடைபெற்றபோது தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதியளித்திருந்தார். அமைச்சரவையிலும் ஆயிரம் ரூபா சம்பளத்தை அதிகரிப்பதற்கான அனுமதி கிடைத்துள்ளது. முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டாமானும் அவருடைய தேர்தல் வாக்குறுதிகளில் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தார். ஆறுமுகம் தொண்டமானின் இறுதி கிரியைகளில் கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, இறுதியான உரையாடலின் ​போது தொண்டமான் ஆயிரம் ரூபா சம்பளம் குறித்து கதைத்தார் என்றும் கூறியிருந்தார்.

தற்போது தோட்டத் தொழிலாளர்கள் 855 ரூபா சம்பளத்தை பெறுகின்றனர். 700 ரூபா அடிப்படை சம்பளம், தினசரி வருகைக்கு 50 ரூபா சேமலாப நிதியம் மற்றும் நம்பிக்கை நிதியத் தொகை 105 ரூபா. 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு சொற்பத் தொகையே சேர்க்க வேண்டும். எனவே ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதனால் கம்பனிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கூட்டு ஒப்பந்ததி்ன் படி மேலதிகமாக கொழுந்து பறித்தால் கிலோவுக்கு 40 ரூபா வழங்கப்படவேண்டும். ஆனால் இன்றும் மஸ்கெலியா தோட்ட யாக்கத்தில் கிலோவுக்கு 35 ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது. அதிலும் 5 ரூபாவை குறைத்துக்கொண்டுதான் மக்களுக்கு வழங்குகிறார்கள்.

அடுத்து கைக்காசு என்று கூறுவார்கள். அது தொழிலாளர்களுக்கு 700 ரூபா வழங்கப்படவேண்டும். எனினும் மஸ்கெலிய பெருந்தோட்ட யாக்கத்தில் 695 ரூபா மட்டுமே வழங்கப்படுகிறது. மிகுதி 5 ரூபா எங்கே செல்கிறது?

புஸ்ஸல்லாவ பெருந்தோட்ட யாக்க பொது முகாமையாளர் அனுப்பியுள்ள அறிக்கையின் படி 725 ரூபா அடிப்படைச் சம்பளம், 100 ரூபா தினசரி வருகைக்கான கொடுப்பனவு, விற்பனைக் கொடுப்பனவாக 100 ரூபா மற்றும் நிதியக் கொடுப்பனவுகள் 105 ரூபா என சேர்ந்து மொத்தமாக 1005 ரூபா சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டதாக கடிதத்தினூடாக அறிவித்துள்ளார். இது சாத்தியப்படாது. இலங்கை பொருளாதாரத்தில் முதுகெலும்பாக இருக்கும் மலையக தொழிலாளர்களுக்கு உரிய சம்பளம் வழங்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image