கிழக்கு முனையம் தொடர்பில் இந்தியாவுக்கு இலங்கை வழங்கியுள்ள செய்தி
கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் முனையம் தொடர்பில், தற்பொழுது இந்திய அரசாங்கம் தெளிவாக புரிந்துக்கொண்டு செயல்படும் என்று இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.
கொழும்பு கிழக்கு துறைமுக கொள்கலன் முனையம் தொடர்பாக நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரண பதிலளிக்கையில், இந்தியா எமக்கு மிகவும் பெறுமதி மிக்க நாடு என தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சர்வதேச ரீதியிலும் அரசியல் ரீதியில் நாம் பெரிதும் மதிக்கின்றோம். இலங்கையை பெறுத்தவரையில் இந்தியா உதவி ஒத்தாசை வழங்குவதில் முக்கிய நாடு என்ற ரீதியில் அதனை தெளிவாக அடையாளம் கண்டுள்ளோம். கொள்கலன் முனையம் தொடர்பில் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை புரிந்துக்கொண்டு இந்தியா செயல்படும் என்று நாம் திடமாக நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.
நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்தித்து இதுதொடர்பான உடன்படிக்கையில் கவனம் செலுத்தியே சமகால அரசாங்கம் செயல்படுகின்றது. நாம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் மிலேனியம் ஒப்பந்தத்தை ரத்து செய்ய ஜனாதிபதி செயல்பட்டார்.
மத்தளை விமான நிலையம் குத்தகைக்கு வழங்கப்பட இருந்ததையும் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. எமது அரசியலுக்கு எமது நிர்வாக காலப்பகுதியில் காப்புறுதி கூட்டுத்தாபனத்தை நாம் மீண்டும் பெற்றோம் என்று அமைச்சர் ரமேஷ் பத்திரண சுட்டிக்காட்டினார்.
இந்த முனையம் தொடர்பாக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இந்தியா, ஜப்பான், இலங்கைக்கிடையிலான உடன்படிக்கை இரத்து செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு இதில் கலந்துக்கொண்ட அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல பதிலளித்தார்.
நாம் அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையில் செயல்படுகின்றோம். அதன் அடிப்படையில் இந்த பிரச்சினையை அனுகி தீர்வை காண்போம் என்று கூறினார்.
இதில் கலந்துக்கொண்ட அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில கருத்து தெரிவிக்கையில், துறைமுக கிழக்கு முனையம் இந்தியாவுக்கு வழங்கும் ஆலோசனை சமகால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றல்ல.
இது கடந்த கால அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவுக்கான விஜயத்தின்போது அப்போதைய அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் அப்போதைய இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோருக்கு இடையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் 15 உடன்படிக்கைகள் தொடர்பாக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இதில் கொழும்பு துறைமுகத்தின் முனையமும் சம்பந்தப்பட்டிருந்தது.
இந்திய முதலீட்டின் மூலம் இந்த முனையம் அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கையும் அதில் இடம்பெற்றிருந்தது. மத்தளை விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கும், எரிவாயு மின்சக்தி அமைப்பதற்கான திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கும், திருகோணமலை துறைமுக அபிவிருத்தியை இந்தியாவுக்கு வழங்குவதற்கும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.