சுங்கத் திணைகளம் ஊழல் மிக்கது என்ற ஜனாதிபதியின் கருத்து கவலையளிக்கிறது
சுங்கத் திணைக்கள செயற்பாடுகளில் மூன்றாம் தரப்பினர் தலையீடு செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சுங்க தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
சுங்கத்திணைக்களம் ஊழல் மிக்கது என்றும் அதில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளையும் நீக்கியாவது அதனை நிறுத்த தான் பின்நிற்கப்போவதில்லை என்று அண்மையில் ஜனாதிபதி வௌியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலேயே சுங்கத் திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் சார்பாக பொது முகாமையாளர் சுதத் டி சில்வா நேற்று (26) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்துள்ளார்
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் ஊழல் மிக்கவர்கள் என்ற கருத்து மிகவும் கவலையளிக்கிறது. இக்கருத்தானது சமூகத்தில் சுங்கத் திணைக்கள ஊழியர்கள் ஊழல் மிக்கவர்கள் என்ற கருத்தை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்லும். எனவே அதற்கான பதிலளிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். சுங்கத் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் திறந்த போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்து விசேட தகமையுடன் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள். ஒரு சிலர் செய்யும் தவறுக்காக அனைத்து அதிகாரிகளும் ஊழல் மிக்கவர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் ஊழலே இல்லாத நிறுவனம் இதுவென்று ஏதாவதொன்றை எம்மால் காட்ட முடியுமா? அனைத்து இடங்களிலும் பிரச்சினைகள் உள்ளன. இது தனிநபருடைய பிரச்சினையல்ல. நடைமுறையில் உள்ள பிரச்சினை என்றும் தெரிவித்தார்.
news wire