பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவருக்கு புதிய உருமாறிய வைரஸ்
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவருக்கு, பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கொவிட்-19 தொற்றினால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தொற்றியுள்ள வைரஸ் தொடர்பில் பேராசிரியர் நீலிகா மலவிகே உள்ளிட்ட குழுவினர் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்படி, அண்மையில் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்தவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்றியுள்ள வைரஸ், பிர்த்தானியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளது.
இது மிகவும் மிக்கியத்துவமிக்க கண்டுபிடிப்பாகும்.
ஏனெனில், இந்த வைரஸின் அபாயம் நாட்டுக்குள் இருப்பதனால், அது நாட்டுக்குள் பரவுவதற்கான சந்தர்ப்பத்தை குறைப்பதற்காக உச்சப்பட்ட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தனிமைப்படுத்தல் நடைமுறைகளை மிகவும் கடுமையாகவும், அவதானத்துடனும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இலங்கையில் உருமாறிய கொரோனா வைரசுடன் அடையாளம் காணப்பட்டவர், இங்கிலாந்து கிரிக்கட் அணியின் வீரர் மொயின் அலியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பிரித்தானியாவில் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்றுறுதியான நிலையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த ஒருவர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் சுதத் சமரவீர இன்று தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாட்டுக்கு வருகை தந்த இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மொயின் அலிக்கு மாத்திரமே கொவிட் -19 தொற்றுறுதியான நிலையில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரது தனிமைப்படுத்தல் காலம் இன்று நிறைவடைகின்றது.
எவ்வாறாயினும் அவரது தனிமைப்படுத்தல் காலத்தை மேலும் அவரது நீடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
மூலம் : சூரியன் எவ் எம் செய்திகள்