பணிப்பாளர் நாயகத்தின் கவனயீனத்தால் தொற்று அபாயத்தில் தொழில் திணைக்கள ஊழியர்கள்

பணிப்பாளர் நாயகத்தின் கவனயீனத்தால் தொற்று அபாயத்தில் தொழில் திணைக்கள ஊழியர்கள்

 

​தொழிலாளர் திணைக்களத்தில் பிரதான 3 பிரிவுகளில் பல ஊழியர்களுக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடுமையான சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திணைக்கள ஊழியர்களுக்கு செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அதன் பின்னர் செய்யப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வருவதில் பெரும் தாமதம் ஏற்பட்டுள்ளமையினால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்க அங்கத்தவர் ஒருவர் எமது இணையதளத்திற்கு தெரிவித்துள்ளார்.

மேற்கு கொழும்பு தொழிலாளர் அலுவலகத்தில் சாரதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ஊழியர்கள் பாரிய சிக்கலுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனினும் அவ்வலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தொழில் ஆணையாளர் அனுமதி வழங்கவில்லை என்றும் அத்தொழிற்சங்க செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

இது தவிர 8வது மாடியில் உள்ள கொடுப்பனவு பிரிவில் அலுவலக உதவியாளர் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள அதிகாரிகள் தற்போது உரிய சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும் அலுவலகத்தின் ஏனைய அதிகாரிகள் வழமைப் ​போல தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர.

தொற்று ஏற்படும் அபாயம் உள்ள நிலையில் அதிகாரிகளையும் ஊழியர்களையும் பாதுகாப்பதற்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்காத நிலை தற்போது காணப்படுகிறது. எவ்வளவு ஆபத்தான நிலையிலும் ஊழியர்கள் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பணிப்பாளர் நாயகம் உள்ளார். அவருடைய நோக்கம் எத்தகைய பிரச்சினையான சூழ்நிலையிலும் திணைக்களம் இயங்கி வருகிறது என்றுகாட்டி நற்பெயரை சம்பாதித்துக்கொள்வதாகும். இதற்கு முன்னர் கரையோர அபிவிருத்தி திணைக்களத்தில் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் அரச நிதியை நாசமாக்கியமைக்கு கருப்புப் புள்ளி பெற்றவர் என்பதனால் ஊழியர்களை ஆபத்தில் வைத்து இந்த சந்தர்ப்பத்தை நற்பெயருக்கு பயன்படுத்த முயல்கிறார் என்றும் அத்தொழிற்சங்க செயற்பாட்டாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்

சேவை பெற வரும் பொதுமக்களுக்கு கை கழுவுதல் உட்பட ஏனைய சேவைகள் ஒழுங்காக முன்னெடுக்கப்படவதில்லை. பாதுகாப்புச் சேவையும் இது தொடர்பில் கவனம் செலுத்துவதில்லை. தொற்று முதன்முதலில் பாதுகாப்பு சேவையில் பணியாற்றியவர்களுக்கே ஏற்பட்டது. எனினும் அவர்கள் தமது கடமையை ஒழுங்காக செய்வதில்லை.

எது எவ்வாறு இருப்பினும் பணிப்பாளர் நாயகத்தின் செயற்பாடுகளினால் அதிகாரிகள் உட்பட அனைத்து ஊழியர்கள் மற்றும் சேவை பெற வரும் பொது மக்கள் என அனைவரும் கொரோனா அபாயத்தை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது என்றும் அத்தொழிற்சங்க செயற்பாட்டாளர் விசனம் தெரிவித்தார்.

 

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image