1,000 ரூபா விவகாரம்: திங்கட்கிழமை அமைச்சரவைக்கு மாற்றுத் திட்டம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான மாற்று யோசனையை, எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை நேற்றையதினம் (07) தொழில் அமைச்சில் இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஷ், மருதபாண்டி ராமேஸ்வரன் முன்னாள் மாகாண சபை அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் தொழிற்சங்கங்களின் சார்பிலும், தொழிலாளர் சம்மேளனத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர எலலேபொல உள்ளிட்ட தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளும், தொழில் அமைச்சின் செயலாளர் மாபா பத்திரண, தொழில் ஆணையாளர் நாயகம் சட்டத்தரணி ப்ரபாத் கீர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையும் இணக்கமன்றி நிறைவடைந்ததுடன், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடப்படாமலும் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில், பேச்சுவார்த்தை தொடர்பில் தொழில் அமைச்சின் செயலாளரினால் விசேட அறிக்கை ஒன்று நேற்று வெளியிடப்பட்டது.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா ஆகக்குறைந்த நாளாந்த வேதனத்தை பெற்றுக் கொடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் ஒருபோதும் மாற்றப்பட மாட்டாது என தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கூறியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் கலந்துரையாடி நியாயமான தீர்வை எட்டுவதற்காக பல்வேறு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்ட போதிலும், இறுதி முடிவு எட்டப்படவில்லை. எனவே பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயம் நிறைவேற்றப்பட வேண்டும்.
எனவே பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கான மாற்று யோசனையை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மிக விரைவாக அந்த வேதன அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.