ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் பிரகடனப்படுத்திய 'எதிர்ப்புத் தினம்'
இன்றைய தினத்தை (21) எதிர்ப்புத் தினமாக பிரகடனப்படுத்தியுள்ள ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்திய நிலையம் நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தது.
ஒரு வருட பயிற்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் இதுவரை நிரந்த சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இவ்வெதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களில் பட்டதாரி பயிலுநர்களாக இணைக்கப்பட்டு ஒரு வருடமும் 4 மாதங்களும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் தாம் இதுவரை நிரந்தர சேவையில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இப்போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இப்பட்டதாரி பயிலுநர்களுக்கு மாதாந்தம் 20,000 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படுகிறது. ஏற்கனவே கடமையாற்றி வரும் நிலையில் அரச ஊழியர்களுக்கான மகப்பேற்று விடுமுறை உட்பட ஏனைய வரப்பிரசாதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் பொது நிருவாக அமைச்சின் முன்பாக இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஏனைய மாவட்டங்களில் மாவட்டச் செயலாகங்களுக்கு முன்பாக இவ்வெதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அரசாங்கம் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டு சேவையில் இணைக்கப்பட்ட பட்டதாரிகளை நிரந்தர சேவையில் இணைக்கும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. பொது சேவைகள் அமைச்சர், செயலாளர் ஆகியோர் ஊடகங்களுக்கு முன்பாக பல்வேறு கதைகளை கூறுகின்றனர். எனினும் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. பயிற்சி நிறைவுற்ற தினத்தற்கு அடுத்த நாள் முதலே நிரந்தர நியமனம் வழங்குமாறு நாம் அரசாங்கத்தைக் கோருகிறோம் என்று ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் மத்தியநிலைத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்துள்ளார்.