மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக, இன்று முதல் மீளத் திறக்கப்படுகின்றன.
நாட்டின் ஏனைய பாகங்களில் சில வரையறைகளின்கீழ், முன்னதாக பாடசாலைகள் திறக்கப்பட்டிருந்த போதிலும், கொவிட்-19 பரவல் காரணமாக மேல் மாகாணத்தில் பாடசாலைகள் திறக்கப்படாதிருந்தன.
இந்த நிலையில், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களை கருத்திற்கொண்டு, மேல் மாகாணத்தில் உள்ள 11 கல்வி வலயங்களில் உள்ள ஆயிரத்து 576 பாடசாலைகளில் 907 பாடசாலைகள் இன்று முதல் மீள திறக்கப்படுகின்றன.
மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 11 ஆம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களும் சுகாதார நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் மீறப்படுமானால், அந்த வாகனத்தின் உரிமையாளருக்கு அல்லது உரிமத்தைக்கொண்டு நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர முடியும்.
போக்குவரத்து பொலிஸார் இது குறித்து அவதானத்துடன் இருப்பதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.