1700 ரூபா சம்பள உயர்வுக்கு ஆதரவளிக்கத் தயார் - இராதா எம்.பி அறிவிப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபா நாள் சம்பளமாகப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளது. அதனை நாங்கள் முழுமையாக எற்றுக் கொள்கின்றோம் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு எங்களுடைய பெண்கள் கடந்த 200 வருடங்களாக பங்களிப்பு செய்து வந்தாலும் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வில்லை என்பது கவலைக்குரிய ஒரு விடயமாகும்.எதிர்காலத்தில் இந்நிலைமை மாற்றமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணியின் மகளிர் தின நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17) இராகலை நகரில் ஜெமினி மண்டபத்தில் நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான சங்கரன் விஜயசந்திரன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாற்றத்தை நோக்கிய மலையகம் எனும் தொனிப் பொருளில் மலையக மக்கள் முன்னணியின் மகளிர் அமைப்பு இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மகளிர் தினத்தில் விசேட பேச்சாளராக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி.பேகம் ரஹ்மான் கலந்து கொண்டார்.கட்சியின் கவுன்சில் உறுப்பினர்கள் மத்திய குழு தொழிற்சங்க நிர்வாக குழு உறுப்பினர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய வேலுசாமி இராதாகிருஸ்ணன் மலையக மக்கள் முன்னணி அண்மைக்காலமாக ஏற்பாடு செய்துவருகின்ற எல்லா நிகழ்வுகளிலும் மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அதற்கு காரணம் மலையக மக்கள் முன்னணி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கட்சி ரீதியாக இன ரீதியாகச் செயற்பட்டதில்லை.நாம் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றமை அதற்கு முக்கிய காரணம்.
ஏதிர்வரும் காலத்தில் சமாதான நீதவான்களாக பெண்களை நியமனம் செய்வதற்கு மலையக மக்கள் முன்னணி நடவடிக்கை எடுத்து வருகின்றது.ஏனெனில் அவர்களுக்குக் கொடுக்கின்ற ஒரு கௌரவமாக நாம் கருதுகின்றோம்.
இன்றைய தினம் விசேட பேச்சாளராக இங்கு வந்து உரையாற்றிய திருமதி பேகம் தனது உரையில் பெண்களின் கல்வியின் முக்கியத்துவத்தைப்பற்றிப் பேசினார்கள் நான் அதனை வரவேற்கின்றேன். ஏனென்றால் நானும் அதனையே எதிர்பார்க்கின்றேன்.எங்களுடைய விடிவு என்பது கல்வியிலேயே தங்கியுள்ளது என்பதை நான் உறுதியாக நம்புகின்றவன்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 1700 ரூபா நாள் சம்பளமாகப் பெற்றுத் தருவதாக கூறியுள்ளது. அதனை நாங்கள் முழுமையாக எற்றுக் கொள்கின்றோம். அதற்கு எங்களுடைய முழுமையான ஒத்துழைப்பு உண்டு.நாம் எதிர்பார்ப்பது 2000 ரூபா ஆனால் 1700 கிடைக்குமாக இருந்தால் அதனை நாம் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றோம்.
தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை எல்லாம் இன்று செய்து கொண்டு மக்களை குழப்பிக்கொண்டிருக் கின்றார்கள்.ஆனால் நாங்கள் அரசாங்கத்தை கேட்டுக்கொள்வது
தேர்தலை நடத்தி மக்களுக்கான வாய்ப்பை கொடுத்து ஜனநாயக அரசாங்கம் ஒன்றைமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்.
மக்ககளின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தான் இருக்கின்றது.எனவே மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துடையது என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.
மூலம் - வீரகேசரி