தோட்டத் தொழிலாளர்களுக்கு ETF, EPF வழங்காத பெருந்தோட்டங்கள் மீதான விசாரணை!
பெருந்தோட்ட கம்பனிகள் சில தமது தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவுகளை சரியான முறையில் வழங்கத் தவறியமையினால் தொடுக்கப்பட்ட வழக்குகள் மீதான விசாரணைகளில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க பெருந்தோட்ட யாக்கம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திசபை ஆகியவை மீது தொடுக்கப்பட்ட விசாரணைகளே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அந்நிறுவனங்கள் மீது 2022 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. குருநாகலை பெருந்தோட்ட நிறுவனம் எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் உள்ளாகாமல் இலாபம் ஈட்டி தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளை சரியான முறையில் வழங்கியுள்ளது. இக்காலம் இலாபம் ஈட்டக்கூடிய காலமல்ல. எனினும் குருநாகலை பெருந்தோட்ட நிறுவனம் சாதித்துக்காட்டியுள்ளது.
ஓய்வுபெறும்போது கிடைக்கவேண்டிய கொடுப்பனவுகள் கிடைக்காமல் தொழிலாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். இவ்விடயம் தொடர்பில் நாம் கூடுதல் கவனம் செலுத்துகிறோம். ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய கொடுப்பனவை வழங்குவதற்கு திரைசேரியூடாக 5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு இன்னும் இருவாரங்களில் அமைச்சரவை அனுமதிக்க சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.