மலையகத்துக்கான 10 ஆயிரம் வீட்டுத் திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவரும், கொட்டகலை பிரதேச சபை தவிசாளருமான ராஜமணி பிரசாந்த் தெரிவித்தார்.
மக்களின் பொருளாதாரத்தினை உயர்த்துவதற்காக 2022 அண்டு வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட கிராமத்திற்கான ஒரு லட்சம் வேலைத்திட்டம் எனும் தொனிப்பொருளில் நாடாளவிய ரீதியில் நேற்று (03) நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த வேலைத்திட்டம் மலையகத்தில் தோட்டம் மற்றும் கிராம புறங்களிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
அந்தவகையில், பத்தனை திம்புள்ள தோட்டத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கான பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில், அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
சகல மக்களினதும் ஆலோசனைகள் உள்வாங்கப்பட்டு, நாடு முழுவதும் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அத்துடன், ஒவ்வொரு பிரதேச சபை உறுப்பினருக்கும் நிதி அமைச்சால் 40 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் எமது தோட்டப்பகுதிகளை மேம்படுத்துவதற்காக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் ஊடாகவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொரோனாவால் கடந்த வருடம் நிதி நெருக்கடி ஏற்பட்டது. அது பெரும் சவாலாக இருந்தது. இவ்வருடம் அந்த சவால் இருக்காது. தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
உள்ளாட்சி சபைகளின் பதவிகாலமும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதற்காகவும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை, இந்தியாவின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட 4 ஆயிரம் வீட்டுத்திட்டம் முழுமைப்படுத்தப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரம் வீட்டுத்திட்டமும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும்.' - என்றார்.