2021ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஊடகவியலாளரான மரியா ரெஸ்ஸா மற்றும் ரஷ்யாவை சேர்ந்த டிமிட்ரி முரடோவ் என்ற இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரம் இன்று உலகெங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், கருத்துச் சுதந்திரத்தை கௌரவிக்கும் வகையில் இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாக நோபல் பரிசு வழங்கும் குழுவின் தலைவி பெரிட்ரெய்ஸ் அண்டர்சன் கூறியுள்ளார்.
கருத்துச் சுதந்திரத்திற்காக இந்த இரண்டு ஊடகவியலாளர்களும் தைரியமாக போராடியுள்ளனர். ஜனநாயகமும் பத்திரிகை சுதந்திரமும் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இந்த உலகில், கருத்துச் சுதந்திரத்திற்காக செயற்படும் அனைத்து பத்திரிகையாளர்களினதும் பிரதிநிதிகளாக இந்த ஊடகவியலாளர்கள் உள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.
அதிகார துஷ்பிரயோகம், பொய்கள் மற்றும் திட்டமிட்ட சூழ்ச்சி நடவடிக்கைகள் என்பவற்றிலிருந்து பாதுகாக்க, சுதந்திரமானதும் சுயாதீனமானதும் உண்மையின் அடிப்படையிலான ஊடகவியலும் உதவுகின்றதென பெரிட்ரெய்ஸ் அண்டர்சன் சுட்டிக்காட்டினார்.
Rappler என்ற புலனாய்வு ஊடகவியல் இணையத்தளத்தை உருவாக்கிய ஊடகவியலாளர் ரெஸ்ஸா, பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டெர்டேயின் போதைப்பொருள் எதிர்ப்பு வன்முறை மற்றும் பல சர்ச்சைகள் தொடர்பாக ஆராய்ந்து தனது செய்தித் தளத்தில் வெளியிட்டார். போதைப்பொருளுக்கு எதிரான டுட்டெர்டேயின் செயற்பாடுகள், மனித குலத்திற்கு எதிரானதென உலகளாவிய ரீதியில் சர்ச்சைகள் எழுந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
ரஷ்ய பத்திரிகையான நொவாயா கசெட்டாவை 1993ஆம் ஆண்டு உருவாக்கிய முரடோவ், 24 வருட காலமாக அதன் தலைமை ஆசிரியராக பணியாற்றுகின்றார். இன்று ரஷ்யாவின் மிகச்சிறந்த சுயாதீன ஊடகங்களில் ஒன்றாக திகழும் நொவாயா கசெட்டாவின் 6 ஊடகவியலாளர்கள் இதுவரை கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று அறிவிக்கப்பட்ட பரிசுக்கு தான் உரிமைகொண்டாட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ள முரடோவ், கருத்துச் சுதந்திரத்திற்கான மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்காக உயிரை நீத்த தனது பத்திரிகையின் ஊடகவியலாளர்களுக்குச் சொந்தமானதென கூறியுள்ளார்.
ரஷ்ய அரச நிறுவனங்களை முரடோவின் பத்திரிகை கடுமையாக விமர்சித்த போதும், பரிசு அறிவிக்கப்பட்ட பின்னர் கிரெம்ளின் மாளிகை முரடோவை வாழ்த்தியுள்ளது.
தமது நாட்டின் போருக்கு பின்னரான ஆயுதமயமாக்கல் திட்டத்தை வெளிப்படுத்தியமைக்காக, 1935ஆம் ஆண்டு ஜேர்மனைச் சேர்ந்த Carl von Ossietzky என்ற ஊடகவியலாளருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சுமார் 85 வருடங்களின் பின்னர் இந்த பரிசு தற்போது இரு ஊடகவியலாளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளமை வரலாற்று சிறப்புமிக்கதாகும். ஊடகத்துறைக்கு இந்த பரிசு சென்றுள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
சுவீடனைச் சேர்ந்த வேதியியலாளர், பொறியியலாளர், கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் மற்றும் பரோபகாரியான அல்ஃப்ரெட் நோபல் 1895ஆம் ஆண்டு நோபல் பரிசை அறிமுகப்படுத்தினார். டிசம்பர் 10ஆம் திகதி அவரது நினைவுதினமாகும். அன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும். பரிசு பெறும் ஒவ்வொருவருக்கும் ஒரு தங்கப்பதக்கமும் ஒரு கேடயமும் நோபல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பணப்பரிசும் வழங்கப்படுவது வழமையாகும்.
மூலம் - சிட்டி போஸ்ட்